மும்பை: மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகியுள்ள நிலையில் நேற்று இரவு முழுவதும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்தன. அடுத்த முதல்வரை முடிவு செய்ய பாஜக மற்றும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு விலகினார். இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இரவு முழுவதுமே அடுத்தடுத்து பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடந்தன.
1.இரவு 9.30 மணிக்கு தொடங்கிய தனது முகநூல் நேரலையில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
2. தாக்கரே தானே ராஜ்பவனுக்கு காரில் சென்றார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் நள்ளிரவில் சமர்ப்பித்தார். |
3. புதிய அரசு அமையும் வரை அவரை முதலமைச்சராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
4. ராஜினாமாவைச் சமர்ப்பித்த பிறகு, உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யா தாக்கரேவுடன் கோயிலுக்குச் சென்றார்.
5. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரவில் கவுகாத்தியில் இருந்து கோவாவை அடைந்தனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பனாஜியில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு வந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
6. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை மும்பைக்கு வர வேண்டாம் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் புதன்கிழமை இரவு கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்து விட்டதால் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது என்பதால் அவர்கள் பதவியேற்பு நாளில் வந்தால் போதும் என்ற தகவல் தரப்பட்டது.
7. அடுத்த கட்ட நடவடிக்கையை தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே எடுப்பார்கள் என்று சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார். பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க இரவில் பல சுற்றுக் கூட்டங்கள் அடுத்தடுத்து நடந்தன.
8. கோவாவில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை செல்வதற்கு முன் நடைபெறும் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடக்கவிருந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தேவையில்லாததால் அதற்காக கூட்டப்பட்டிருந்த சிறப்பு பேரவை கூட்டம் ரத்தானது.
மகாராஷ்டிர முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சிவசேனா அதிருப்தி தலைவர் ஷிண்டே ஆளுநர் கோஷியாரியை சந்திப்பார் எனத் தெரிகிறது.