புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின் கீழ் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபோல் ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக செய்தி இணையதள இணை நிறுவனர் முகம்மது ஜுபைர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி அதன் வசதிக்கேற்ப நீதிமன்ற நடவடிக்கைகளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்கிறது.
நீதித்துறை மீது நம்பிக்கை இருக்கிறதா என காங்கிரஸ் கூறவேண்டும். சீதல்வாட், ஜுபைர் கைதுக்கு எதிரான விமர்சனங்களை பார்க்கும்போது, குற்றவாளி ஒருவர் பிடிபட்ட மற்றொரு குற்றவாளியை பாதுகாக்கும் நச்சு சுற்றுச்சூழல் இங்கு இருப்பது தெளிவாகிறது. இந்த நச்சு சுற்றுச்சூழலில் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். உலகின் வலிமையான நீதி பரிபாலன அமைப்பு நம் நாட்டில் உள்ளது. அது, அதன் பணிகளை செய்யும். வகுப்புவாத வெறுப்புணர்வை வளர்க்கும் சிறிய கிளையாக சீதல்வாட் இருந்தார். ஆனால் அதன் முக்கிய தலைமையகம் காங்கிரஸில் இருந்தது. இவ்வாறு கவுரவ் பாட்டியா கூறினார்.