புதுச்சேரி: ”புதுச்சேரி அரசு கடந்த 2015-16ல் ஈட்டிய வருவாயை, ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்துஐந்து ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் எட்ட முடியவில்லை. எனவே ஜி.எஸ்.டி.,இழப்பீட்டை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து, 1,300 கோடி ரூபாய் வருவாய்இடைவெளியை ஈடுகட்ட வேண்டும்” என ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசு சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு, மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தியது.இந்த புதிய வரி அமைப்பின் காரணமாக, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.
இழப்பீடு தொகை
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது இன்று 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், சண்டிகரில் கடந்த இரண்டு நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.இதில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்கள், ஜி.எஸ்.டி., இழப்பீட்டினை இன்னும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தின.
ஜி.எஸ்.டி.யால் பாதிப்பு
இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசிய தாவது:
புதுச்சேரி மாநிலத்தின் அடிப்படை ஆண்டு வருவாய் 1095 கோடி. இருப்பினும், முந்தைய நிதியாண்டான 2021 – 22க்கான தீர்வு உள்பட மொத்த ஜி.எஸ்.டி., வருவாய், 848 கோடி ரூபாய் மட்டுமே எட்டப்பட்டது. வருவாய் இடைவெளி 247 கோடி ரூபாயாக உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2015-16ம் ஆண்டு ஈட்டிய வருவாயை, ஜி.எஸ்.டி, அமலுக்கு வந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும் எட்ட முடியவில்லை.’வாட்’ வரி விதிப்பின்போது, அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் பொருட்களுக்கு பெரிய விலை வித்தியாசம் இருந்தது. உற்பத்தி, மத்திய விற்பனை வரி மூலம் கணிசமாக வருவாய் கிடைத்தது.
வருவாய் இடைவெளி
தற்போது நுகர்வு அடிப்படையிலான ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், ஜி.எஸ்.டி.க்கு முந்தைய வருவாயை விட புதுச்சேரியின் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது.கடந்த 2021-22ல் ஜி.எஸ்.டி., இழப்பீடு நிலுவை தொகையை 21 சதவீதம் அளவுக்கு தந்ததால் வருவாய் இடைவெளி குறைக்கப்பட்டது.வருவாயை அதிகரிக்க புதுச்சேரி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரு கிறது என்றாலும், கட்டமைப்பு சிக்கல் காரணமாக விரும்பிய வருவாய் வளர்ச்சியை எட்ட முடியவில்லை.
கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், புதுச்சேரியில் 2022-23ம் ஆண்டுக்கான வருவாய் இடைவெளி 1,300 கோடி ரூபாயாக இருக்கும்.புதுச்சேரிக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி கடந்த சில ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக அளிக்கப்படும் மத்திய அரசின் நிதியுதவியின் அளவு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நிலையாக உள்ளது.
நீட்டிக்க கோரிக்கை
இந்த காரணங்களால், ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசிடம், குறிப்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியதால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்யாவிட்டால் புதுச்சேரிக்கு வருவாய் குறையும். குறிப்பாக, 1,300 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் குறைந்து திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும்.எனவே, கட்டமைப்பு சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து, வருவாய் இடைவெளியை ஈடுகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.