`முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது'- நீதிமன்றம்

தமிழகத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது என்றும், அது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த வாய்ப்பாக அமையும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போதுவரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
image
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும்.
ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
image
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “முறையான வழிகாட்டுதல்கள் இன்றி, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது. இது ஏற்கத்தக்கதல்ல. இது மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களுக்கு தேவையான, தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த வாய்ப்பாக அமையும்” என குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.