வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் 2022ம் ஆண்டுக்கான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தயாரிப்புகள் புதிய சந்தைகளை அடைய நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(எம்எஸ்எம்இ) துறை வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். எம்எஸ்எம்இ இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் மிகப்பெரிய தூண். இந்த துறையில், புதிய கொள்கைகளை உருவாக்கி முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை இந்த துறை கொண்டுள்ளது. இந்த துறையை வலுப்படுத்த கடந்த 8 ஆண்டுகளில் அரசாங்கம் 650 சதவீதத்திற்கும் மேலாக பட்ஜெட்டை உயர்த்தி உள்ளது.
100 ஆண்டுகளில் மிகப்பெரிய நெருக்கடி வந்த போது சிறு நிறுவனங்களை காப்பாற்றி புதிய பலத்தை கொடுக்க முடிவு செய்தோம். எம்எஸ்எம்இ.,களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி உதவி வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. எந்த துறையும் வளர விரிவடைய விரும்பினால், அதற்கு அரசு ஆதரவு அளிப்பது மட்டுமல்லாமல் கொள்கைகளிலும் தேவையான மாற்றங்களை செய்து வருகிறது. அதிக கவனம் செலுத்தி எம்எஸ்எம்இ துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த துறையை மேம்படுத்த திட்டம் வகுத்து வேலைவாய்ப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Advertisement