புதுடெல்லி: தம் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக கூறிய சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் புகார் குறித்து மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கருத்து கூறியுள்ளார். “இவர்கள் கடத்தப்படவில்லை. 40 எம்.எல்.ஏ.க்கள் 40 நாட்களில் ஹனுமன் மந்திரம் ஓதிய மகிமையால் வெளியேறினர்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் மகாராஷ்டிராவில் மசூதிகளின் ஒலிபெருக்கி சர்ச்சை கிளம்பியது. இதற்கு தடை விதிக்கக் கோரினார் மகாராஷ்டிராவின் சுயேச்சை எம்.பி.யான நவ்நீத் ராணா. இதற்காக அவர் தன் கணவரும் சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ராணாவுடன் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் முன் போராட்டம் நடத்தினார். இதில், ஹனுமன் மந்திரம் ஓதியவர்கள் ஏப்ரல் 23-இல் கைதாகி ஜாமீனில் வந்தனர்.
இந்நிலையில், சிவசேனாவின் எம்.எல்.ஏ.க்கள் அசாமிற்கு சென்று தங்கினர். இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், அவர்கள் கடத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
தற்போது உத்தவ் தாக்கரே தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா ஒரு கருத்து கூறியுள்ளார். இதில் அவர், ராணா தம்பதிகள் ஹனுமன் மந்திரம் ஓதி நடத்திய போராட்டத்தை நினைவு கூர்ந்தார்.
இது குறித்து அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, “எனது தேசம் மாறி வருகிறது. சஞ்சய் ராவத் கூறியபடி அவரது கட்சி எம்எல்ஏக்கள் கடத்தப்படவில்லை. இவர்கள் அனைவரும் காவிக்கு மாறியுள்ளனர். முதல்வராக இருந்த உத்தவ் வீட்டின் முன் ஹனுமன் மந்திரம் ஓதப்பட்டதன் மகிமையால் இது நடந்தேறியது.
ஹனுமன் மந்திரம் ஓதிய 40 நாட்களில் அவரது கட்சியின் 40 எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவை விட்டு விலகிவிட்டனர். காங்கிரஸின் தொடர்பில் உத்தவ் வந்தமையால் அவர் பதவி விலக வேண்டியாதயிற்று” எனத் தெரிவித்துள்ளார்.