ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் 3 முக்கியமான செயற்கைகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை பொறுத்த வரை சமீப காலங்களாகா பணம் பெற்று வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அண்டை நாடுகளுகாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியை செய்து வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் விண்ணில் செலுத்தியுள்ள பிஎஸ்எல்வி சி-53 என்ற ராக்கெட் மூலமாக சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மற்றும் பல்கலைகழகங்கள் அனுப்பக்கூடிய 3 செயற்கைகோள்களை புவியின் சுற்றுவட்ட பாதையில் இந்த பிஎஸ்எல்வி சி-53 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளனர். இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு துவங்கியது. இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் இந்த 3 செயற்கைகோள்களும் பூமியில் இருந்து சுமார் 600 கி.மீ. தொலைவில் உள்ள புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைக்கோள் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளும் அதனுடன் சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைக்கோளான 155 கிலோ எடை கொண்ட என்இயு-சாட் செயற்கைக்கோளும், சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகமான நக்கியம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள 2.8 கிலோ எடையுள்ள நானோ செயற்கைகோள் ஸ்கூப் 1 என 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பிஎஸ்எல்வி ரகத்தில் 16-வது ராக்கெட் இதுவாகும். டிஎஸ்-இஓ செயற்கைக்கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது. இது கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது.இந்த ராக்கெட் மூலமாக சுமார் 600கி.மீ. தொலைவிற்கு 1.5 டன் எடையுள்ள பொருட்களை விண்வெளிக்கு செலுத்த முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.