தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழில் சீர்திருத்த செயல்திட்ட அடிப்படையில் மாநிலங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய 7 மாநிலங்கள் தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியதில் முதன்மை மாநிலங்களாக திகழ்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதன்மை மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 7 மாநிலங்களில் 5 மாநிலங்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒற்றைச் சாளர நடைமுறை, தொழிலாளர் நலன் உள்ளிட்ட 301 வகையான சீர்திருத்தங்கள் அடிப்படையில் மத்திய அரசு இந்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இமாச்சல்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தொழில் சீர்திருத்த திட்டங்களை வேகமாக அமல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகம் செய்வதற்கு தற்போது வளர்ந்து வரும் சூழல் நிலவும் மாநிலங்கள் பிரிவில் டெல்லி, புதுச்சேரி, மணிப்பூர், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM