தமிழ்நாட்டையே உலுக்கிய மேலவளவு சாதிய படுகொலை சம்பவம் அரங்கேறி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
1996 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலவளவில் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அடக்கு முறைகளுக்கும் சாதியக் கட்டுப்பாடுகளின் கொடூர முகத்திற்கும் எடுத்துக்காட்டாய் இன்றும் நிற்கின்றது. இந்நிகழ்வு நடந்து, இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்த படுகொலைக்கான பின்னணியை சுருக்கமாகவாவது அறிந்து கொண்டால்தான் சாதி வன்மத்தின் கோரமுகங்கள் தெரியவரும்.
1996ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பட்டியலின வகுப்பைச் சேர்ந்த முருகேசன் மற்றும் சிலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது ஆதிக்க சாதியினர் சிலரின் மிரட்டலுக்குப் பயந்து முருகேசன் உட்பட வேட்பு மனு செய்தவர்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அதன்பின் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட சமாதானக் கூட்டத்தில், இருவேறு சமுதாயத்தினரும் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக எழுத்து மூலம் உறுதி அளித்தனர். அதன்பின் மறு அறிவிப்பின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. முருகேசன் உட்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது எழுந்த வன்முறையில் தேர்தல் தடைபட்டது.
பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அதே 8 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டனர். காவல் துறையின் கூடுதல் பாதுகாப்போடு தேர்தல் நடந்தது. வாக்களிப்பில் பட்டியலின மக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மாற்றுச் சாதியினர் தேர்தலைப் புறக்கணித்தனர். முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (முருகேசன் திமுகவைச் சேர்ந்தவர்).
ஊராட்சி மன்ற அலுவலகம் ஆதிக்க சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருப்பதால், முருகேசனால் அங்கு செல்ல முடியாத சூழல் தொடர்ந்தது. ஆனால், படிப்படியாக தலைவர் முருகேசனிடம் மாற்றுச் சமூகத்தினர் பழகி வந்தனர். ஊராட்சி மன்ற ஒப்பந்தப் பணிகளைப் பெற்று, அவர்கள் முருகேசனுடன் இயல்பாகப் பழகி வந்தனர்.
மேலவளவு தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து பலவிதச் சிக்கல்களை பட்டியலின மக்கள் சந்தித்து வந்தனர். 3 பட்டியலினத்தவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதற்கு நிவாரணம் பெற, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மனு கொடுத்தார். பின்னர் முருகேசன் உட்பட மற்றவர்களும் பேருந்தில் ஊர் திரும்ப புறப்பட்டனர். மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக் கொண்டனர். வரும் வழியில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் பேருந்தில் ஆயுதங்களுடன் ஏறினர். பேருந்தில் இருந்த முருகேசன், ராஜா, செல்லத்துரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்), பூபதி ஆகிய 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பிலிருந்து தனியாக வெட்டி எடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
1997ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி நடந்த இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 41 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராமன், பாம்பு கடித்து இறந்து விட்டார். நீண்ட விசாரணைகளுக்குப் பின் 2001ஆம் ஆண்டு நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 23 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட 17 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல் முறையீடுகளின் மீதான விசாரணைகள் நடந்து வந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிணையில் வெளி வந்தனர். தொடர்ந்து நடந்த விசாரணைகளை அடுத்து 17 பேரின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏற்கனவே விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், அதனால் இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுவதாகவும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த 17 பேரில் 3 பேர் 2008-இல் வயது முதிர்வு காரணமாகவும், பொது மன்னிப்பு கிடைத்து விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 13 பேர் விடுப்பு சிறை தண்டனையை அனுபவித்து வந்தனர். இவர்களை எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார். விடுதலை செய்யக் கூடாது என பட்டியலின தலைவர்கள் வலியுறுத்தினர். கொலை செய்யப்பட்ட முருகேசனின் மனைவி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என வலியுறுத்தினர்.
இதனிடையே, கொலையில் தொடர்புடைய மீதமுள்ள 13 பேரையும் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையிலிருந்து 2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
7 பேர் நினைவாக மேலவளவில் விடுதலை களம் அமைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனுக்கு சிலை மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று அவர்களுடைய 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் நேரில் வந்து நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 7 பேரின் உயிரை சாதிய வன்மம் விழுங்கிக்கொண்ட சோகம் மேலவளவில் இன்னமும் புதைந்து கிடக்கிறது.
இதையும் படிக்கலாம்: உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM