‘தூதன் வருவன்! வதைக்கப்படுவன்! மதலை விழிநீர் துடைப்பன்! மாரி பெய்யும்!’ இவ்வரிகளுக்கு முழுவதுமாக பொருந்தக்கூடிய கிரிக்கெட் கேப்டன்கள் மிகச் சிலரே.
அதில் முக்கியமானவர் இங்கிலாந்து அணியின் இயான் மோர்கன். சோர்ந்து கிடந்த இங்கிலாந்து அணிக்கு புது பாய்ச்சலிட்டு முதல் உலகக்கோப்பையை வெல்ல வைத்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியின் கலாச்சாரத்தையும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்ற அவர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
இயான் மோர்கன் சர்வதேச அரங்கில் அயர்லாந்து அணிக்காகவே முதல் முறையாக களம் கண்டார். ஸ்காட்லாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் 99 ரன்களுக்கு குவித்தார். 2006 – 2009 வரையிலான ஆண்டுகளில் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 744 ரன்கள் எடுத்திருந்த அவர் இங்கிலாந்தின் உள்ளூர் போட்டிகளில் Middlesex, England lions அணிகளுக்காகத் தொடர்ந்து விளையாடி வந்தார். இதன்மூலம் 2009-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்து இங்கிலாந்து அணியுடனான தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
அன்று முதல் கடைசியாக நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை வரை அத்தனை ICC கோப்பை தொடர்களிலும் மோர்கனுக்கு தவறாமல் இடம் உண்டு. 2012-ம் ஆண்டில் அணியின் துணை கேப்டனாக உயர்த்தப்பட்ட அவர் 2014-ம் ஆண்டு டிசம்பரில் அலாஸ்டர் குக்கின் ஓய்விற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் லிமிடெட் ஓவர் கேப்டனாக ஆனார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு அதிகமுறை கேப்டன்சி செய்து, அதிக ரன்கள், சிக்சர்கள், வீரராக அதிக போட்டிகள் எனப் பல்வேறு சாதனைகளையும் மோர்கன் வசமே உள்ளன. 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி வீரர்களுக்கும் மறக்க வேண்டிய ஒரு தொடர். மோர்கன் கேப்டனாக பதவியேற்ற சில மாதங்களிலேயே நடந்த உலகக்கோப்பை தொடர் அது. வங்கதேசத்திடம் தோல்வி அடைந்து காலிறுதிக்குகூட தகுதிப்பெறாமல் வெளியேறியது இங்கிலாந்து.
ஆனால் அதன்பின் நடந்த மாற்றங்கள் அனைத்தும் இங்கிலாந்து ஒயிட் பால் அணியை வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறச் செய்ய வல்லவை என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. ஆண்ட்ரூ ஸ்டார்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநராக ஆன பிறகு ரெட் பால் மற்றும் ஒயிட் பால் ஆகிய இரண்டிற்கும் இரு புதிய ஒப்பந்தங்கள் வகுக்கப்பட்டன. இதன் மூலம் இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட்க்கு ஹேல்ஸ், ஜேசன் ராய், ஆர்ச்சர் எனப் புது ரத்தம் பாய்ச்சப்பட்டது.
அதேபோல மறக்கவேண்டிய அந்த உலகக்கோப்பைக்கு பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளராக டிரெவர் பெய்லிஸ் (Trevor Bayliss) நியமிக்கப்பட்டார். இவரின் ஆகச்சிறந்த மந்திரிமாக ‘Change the attitude’ களத்தில் அப்படியே வெளிப்படத் தொடங்கியது. இந்த இரண்டும் சேர்ந்து வெற்றி என்னும் முடிவைத் தர Catalyst-ஆக செயல்பட்டார் மோர்கன்.
2015 முதல் 2019 காலகட்டத்தை இங்கிலாந்து ஒயிட் பால் கிரிக்கெட்டின் பொற்காலம் என எந்த முன்யோசனையும் இல்லாமல் கூறிவிடலாம். மோர்கனின் தலைமையில் சொந்த மண்ணில் கணிசமான வெற்றிகளைப் பெற்று வந்த இங்கிலாந்து 2016-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக 444 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அதே ஆண்டில் பிராத்வெயிட்டின் அதிரடியால் டி20 உலகக்கோப்பை இழந்த அந்த அணி பெரும் எதிர்பார்ப்புடன் சொந்த மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை (2017) எதிர்கொண்டது. ஆனால் அதிலும் பாகிஸ்தான் உடனான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது.
அவ்வப்போது ஏற்படும் தோல்விகளால் தன் அணுகுமுறையில் இருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை இங்கிலாந்து. அதுவரை அடித்து ஆடியவர்கள் அதன்பின் இன்னும் உக்கிரமாக அடிக்க தொடங்கினர். 2018-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 481 ரன்கள் குவித்து தன் சாதனையை தானே மீண்டும் முறியடித்தது. ஆனால் அதே வருடத்தில் ஸ்காட்லாந்திடம் 6 ரன் வித்தியாசத்தில் தோற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது நம்பர் ஒன் அணியாய் திகழ்ந்த இங்கிலாந்து.
முன்பு தவறிய சாம்பியன்ஸ் டிராபியை போலல்லாமல் “இந்த வாட்டி மிஸ்ஸே ஆகாது” என 2019 உலகக்கோப்பையில் களம் கண்டது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து படை. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரே போட்டியில் சுமார் 17 சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்தார் மோர்கன். எப்போதும் எக்கனாமிக்கலாக வீசும் ரஷித் கானையே அன்று பதம் பார்த்தது, மாஸ்! பரபரப்பான இறுதிப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்ற போதும்கூட, கூலாக ஆர்ச்சரை பௌலிங் செய்ய வைத்து இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். அதேபோல அடுத்து நடந்த டி20 உலகக்கோப்பையில் அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் மோர்கன்.
உலகக்கோப்பை வெற்றி, ஐசிசி தொடர்களில் நிலையான செயல்பாடு என இங்கிலாந்து அணியின் இந்த மாற்றங்களுக்கு முக்கிய காரணம் மோர்கன் காட்டிய பாதை. அடித்தளமின்றி தடுமாறிய அணிக்கு அதிரடி ஆட்டம்தான் இனி உங்கள் பாதை என வழிகாட்டினார் அவர். இந்தியா போன்ற நாடுகளுடனான வெளிநாட்டு தொடர்களில் தோல்வியடைந்த போதும் இந்தப் போக்கை மட்டும் மாற்றவில்லை. 2015-2019 காலகட்டத்தில் மட்டும் இங்கிலாந்து அணி 37 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்தது. மோர்கனின் தலைமைப் பண்பினால் விளைந்தவை இவை.
டெஸ்ட் போட்டிகளுக்கு தன்னை மீண்டும் கேப்டனாக வருமாறு அழைத்த போது, “நான் அதற்குத் தயாராக இல்லை. ஸ்டோக்ஸ் நல்ல தலைவர். அவரையே நான் உங்களுக்கு முன்மொழிகிறேன்” என எதிர்காலத்திற்கு வழி சொன்னார். சில்வர்வுட் பயிற்சியாளராக பதவி விலகியவுடன், டெஸ்ட் மற்றும் ஒயிட் பால் போட்டிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர் வேண்டும் என முன்மொழிந்தவரும் அவரே.
2019 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவிருந்த அலெக்ஸ் ஹேல்ஸ் கடைசி நேரத்தில் Recreational Drug பரிசோதனையில் தோல்வியடைந்து அணியில் தன் இடத்தையும் இழந்தார். வாகன், நசீர் ஹுசைன், வோக்ஸ் போன்றோர் ஹேல்ஸ்க்கு இரண்டாம் வாய்ப்பு வழங்குமாறு குரல் கொடுக்க, மோர்கனோ இவ்வாறு கூறினார்.
“2021 டி20 உலகக்கோப்பை அணியில் ஹேல்ஸ்க்குக் கண்டிப்பாக இடம் இல்லை. எங்கள் டாப் ஆர்டரை எக்காரணத்திற்காவும் இன்னலுக்கு ஆளாக்க மாட்டேன். இப்போது உள்ள காம்பினேஷனை இழக்க நான் தயாராக இல்லை” எனத் திட்டவட்டமாக கூறிவிட்டார். கடந்த 18 மாதங்களாகக் காயத்தால் பார்மின்றி தவித்த மோர்கன் நடந்து முடிந்த நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். தன் ஓய்வு முடிவை அறிவிக்கும் வரையிலும் தன் அணிக்குத் தேவையானவற்றை தருவதில் மிக உறுதியாக இருந்தார் மோர்கன்.
இங்கிலாந்து அணி வருங்காலத்தில் 500 ரன்களை கூட அடிக்கலாம். ஆனால், அவை அனைத்திற்கும் விதை போட்டது கேப்டன் மோர்கனே! “இங்கிலாந்து ஒயிட் பால் கிரிக்கெட்டின் எதிர்காலம் எப்போதையும்விட பிரகாசமாக உள்ளது!” என்று தன் ஓய்வு குறிப்பில் குறிப்பிட்டிருந்தார் மோர்கன்.
இங்கிலாந்து ஒயிட் பால் கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத காலகட்டத்தை ஏற்படுத்தி தந்த இயான் மார்கனுக்கு அணியின் சகவீரர்கள் குறிப்பிடுவது போல – ‘Goodbye Boss!’