மகாராஷ்ட்ராவில் திடீர் அரசியல் திருப்பமாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றார். அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என மாலை 4.30 க்கு பேட்டியளித்த பட்னாவிஸ், 3 மணி நேரத்தில் மனம் மாறி இரவு 7.30 மணிக்கு துணை முதல்வராக பதவியேற்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்திவந்தன., கடந்த ஜூன் 21 ஆம்தேதி அதிருப்தியை வெளிப்படுத்திய சிவசேனா கட்சியின் முன்னணித்தலைவரான ஏக்நாத் ஷிண்டே, குஜராத் மாநிலம் சூரத்திற்கு அதிருப்தி எம்எல்ஏக்களுடன் முகாமிட்டார். அங்கிருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் இடம்பெயர்ந்தனர்.
மகாராஷ்ட்ராவில் அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், அடுத்ததாக கோவாவுக்கு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் முகாமை மாற்றினர். பெரும்பான்மையை நிரூபிக்க சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தடையில்லை என அறிவித்தது. இதனை அடுத்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, கோவாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை திரும்பி, பாரதிய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினர். ஷிண்டேவின் வருகையையொட்டி சாலைகளில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரது கான்வாய்க்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
ஆளுநரை சந்தித்த பின் மாலை 4.30 மணிக்கு தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று ஷிண்டே தெரிவித்தார். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டேதான் மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்றும் ஷிண்டே அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என்றும் ஆனால் பட்னாவிஸ் அமைச்சரவையில் இடம் பெறமாட்டார் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் துணை முதலமைச்சராக பதவியேற்க ஒப்புக்கொண்டார் பட்னாவிஸ். அமைச்சரவையில் சேர ஒப்புக்கொண்ட பட்னாவிஸ்க்கு ட்விட்டரில் அமித்ஷா, ஜே.பி.நட்டா நன்றி தெரிவித்தனர். இதையடுத்து இரவு 7.30 மணியளவில் மகாராஷ்டிர முதல்வராக ஆளுநர் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே. பால் தாக்கரேவின் பெயரைக் கூறி மராத்திய மொழியில் அவர் பதவியேற்றார். பின்னர் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM