கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 100 வார்டுகளில் 97 இடங்களை தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க 3 இடங்களையும் வென்றது. தி.மு.க உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், மாமன்றக் கூட்டங்களில் பெரிதாக பிரச்னை இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
அ.தி.மு.க உறுப்பினர்கள் மூன்று பேரை இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்திருந்தனர். ஆனாலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்தான் கூட்டம் நடந்தது.
எதிர்க்கட்சி இல்லாவிடின் என்ன, என்கிற ரீதியில் தி.மு.க உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் மூன்று பேரும், “ஊழல் நடக்குதுங்கோ. கோடியில் மேயர் வீடு சுண்ணாம்பு அடிக்கறாங்கோ. மக்கள் வரிப்பணம் விரயம் ஆகுதுங்கோ.” என்ற பதாகைகளை ஏந்தி மாநகராட்சி மாமன்றம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
இது குறித்து கோவை மாநகராட்சி அ.தி.மு.க குழுத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், “கோவை மாநகராட்சி முழுவதும் குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. தண்ணீர் சரியாக வருவதில்லை. சாலை முதல் சாக்கடை வரை எதையும் பராமரிப்பதில்லை. ஆனால் மேயரின் வீட்டை அலங்கரிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளனர்.
அதேபோல கிழக்கு மண்டல பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளனர். இவையெல்லாம் யாருடைய பணம். இவர்கள் சொகுசாக வாழ, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா?” என்று கேள்வி எழுப்பினார்.