‘ஆதார்-பான்’ எண் இணைக்காவிட்டால் நாளை முதல் இரு மடங்கு அபராதம்

புதுடெல்லி: ’பான்’ எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ‘ஆதார்’ எண்ணை இன்னும் இணைக்கவில்லை என்றால், நாளை(ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, ஒவ்வொரு குடிமகனும், தன்னுடைய பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இரு எண்களை இணைப்பதற்கு நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. பின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், எண்களை இணைக்காமல் இருந்தவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில், ஒன்றிய அரசு, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி அறிவித்தது.இருப்பினும், மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, ஜூன் 30ம் தேதிக்குள்ளாக இணைப்பவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய நேரடி வருமான வரித்துறை அறிவித்தது. மேலும், ஜூலை முதல் தேதியிலிருந்து இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது.இந்த புதிய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும். அதன் பிறகு அந்த எண்ணை எதிலும் பயன்படுத்த இயலாமல் போய்விடும் என்றும், கடந்த மார்ச் 30ம் தேதியன்று வருமான வரி துறை அறிவித்திருந்தது .எனவே, நாளை முதல் அபராதம் இரு மடங்காக உயர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.