கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
கரூரில் தற்போதைய உழவர் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், 1987, நவ.27-ம் தேதி தற்போது செயல்படும் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்துக்கு இடம் மாற்றப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் இருந்தும் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
‘ஏ’ கிரேடு நிலையிலான கரூர்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 70 பேருந்துகள் வரை நிறுத்தமுடியும். ஆனால், தினமும் 1,000-க்கும் அதிகமான பேருந்துகள், பல நடைகள் வந்து செல்கின்றன. இதனால், நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள் அதிகரித்தன. இதனால், பேருந்து நிலையத்தை இடம் மாற்றவேண்டும் என்று 2002-ம் ஆண்டு முதலே வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே சுக்காலியூர் பகுதிக்கு பேருந்து நிலையத்தை இடம் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரூர் நகராட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு மேல் அந்தஅறிவிப்பு செயல்வடிவம் பெறவில்லை. மேலும், 2014-ல் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல்வேறு வழக்குகள்காரணமாக அதுவும் நிறைவேறவில்லை. மேலும், முந்தைய அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், தோரணக்கல்பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அதிலும் தொடர் நடவடிக்கை இல்லை.
இதனிடையே, கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், இடம் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், திருமாநிலையூரில் ஜூலை 2-ம் தேதி நடைபெறவுள்ள அரசு விழாவில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி, முடிவுற்ற பல்வேறு பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதில், கரூர் புதிய பேருந்து நிலையத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கூறியது: “கரூரில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. எனவே, தொலைநோக்குப் பார்வையுடன் புறநகரில் அதிநவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். அரசியல், ஆட்சி மாற்றம் என பல்வேறு காரணங்களால் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கை, கடந்த 20 ஆண்டுகளாக வெறும் அறிவிப்பாகவே உள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கரூரில் புதிய பேருந்து நிலையம்அமைக்கப்படும் என்ற அறிவிப்பை, அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்” என்றார்.