ஆந்திராவில் இன்று காலை சோகம்; ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளர்கள் உள்பட 8 பேர் பலி

திருமலை: ஆந்திராவில் இன்று காலை உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் லோடு ஆட்டோவில் சென்ற தொழிலாளர்கள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குன்றம்பள்ளி கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினசரி மற்ற கிராமங்களுக்கு சென்று நாற்று நடவுப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் சென்றுவருவது வழக்கம். அதன்படி இன்று காலை 6.30 மணியளவில் குன்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறிச்சென்றனர். விவசாய பணிக்கு தேவையான கருவிகளை ஷேர்ஆட்டோவின் மேல் பகுதியில் வைத்திருந்தனர். இதையடுத்து சில்லகொண்டையப்பள்ளி வழியாக ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள சாலையின் குறுக்கே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ மீது இருந்த விவசாய கருவிகள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஆட்டோ தீப்பற்றி எரிந்தது. அதில் பயணம் செய்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர்கள் வெளியே வர முடியாமல் கதறினர். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தீயில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்க முயன்றனர். ஆனால் உயர் அழுத்த மின்கம்பியின் மின் இணைப்பு துண்டிக்கப்படாததால் செய்வதறியாமல் தவித்தனர். உடனடியாக குன்றம்பள்ளி போலீசாருக்கு தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த மின்வாரிய துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர்விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் 7 தொழிலாளர்கள் என 8 பேரும் உடல் கருகி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கதறி அழுதனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 8 பேர் இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.