இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை – ஜெர்மனியில் நடந்தது

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான லோகேஷ் ராகுல் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் ராகுலுக்கு அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து 30 வயதான லோகேஷ் ராகுல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கடந்த 2 வாரங்கள் எனக்கு கடினமாக இருந்தது. எனக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தற்போது காயம் குணமடைந்து வருகிறது. உடல் நிலை நன்றாக தேறி வருகிறது. எனது உடல் தகுதியை மீட்கும் பயணம் தொடங்கி இருக்கிறது. உங்களுடைய வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. விரைவில் உங்களை சந்திப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய 2 மாதங்கள் வரை பிடிக்கும். அவர் நாடு திரும்பியதும் சில நாட்கள் ஓய்வெடுப்பார். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை தொடங்குவார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.