நியூயார்க்:’இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை, 2035ல், 67.5 கோடியாக இருக்கும்’ என, ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா., உலக நகரங்கள் குறித்த அறிக்கையை, நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காலத்தில், நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், மக்கள் நகரங்களில் இருந்து, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது, இந்த நிலை மாறி, மக்கள் மீண்டும் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கி விட்டனர்.
படிப்பு, வேலை, தொழில் என, பல காரணங்களால், மக்கள் நகரங்களுக்கு செல்கின்றனர். இதனால், நகரமயமாக்கல் விரிவடைந்து வருகிறது.வரும் 2035ல், உலகிலேயே மிகவும் அதிகமாக, சீன நகரங்களில், 100 கோடி பேர் வசிப்பர். இதற்கடுத்து, இந்திய நகரங்களில், 67.5 கோடி பேர் வசிப்பர். வரும், 2050ம் ஆண்டுக்குள், உலகெங்கும் உள்ள நகரங்களில், தற்போது உள்ளதை விட கூடுதலாக, 220 கோடி பேர் வசிப்பர்.
இந்தியாவில், 2020ல், 48.30 கோடி பேர் நகரங்களில் வசித்தனர். இது, 2025ல் 54.27 கோடியாகவும், 2030ல் 60.73 கோடியாகவும் உயரும்.வரும் 2035ல், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 43.2 சதவீதம் பேர் நகரங்களில் வசிப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement