பெங்களூரு:
40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு
கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவராக இருந்து வருபவர் கெம்பண்ணா. இவர், கடந்த ஆண்டு(2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், கர்நாடக அரசின் திட்ட பணிகளில் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்குமாறு வற்புறுத்தப்படுவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கெம்பண்ணா கூறி இருந்தார். பிரதமருக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பையும், ஆளும் பா.ஜனதா அரசு மீது பெரும் குற்றச்சாட்டும் எழுந்தது.
அத்துடன் இந்த 40 சதவீத கமிஷன் புகார் கர்நாடக அரசுக்கு நெருக்கடியையும் கொடுத்தது. இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கர்நாடக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் கெம்பண்ணாவை, பிரதமர் அலுவலக அதிகாரிகள் தொடர்பு கொண்டு, அரசு ஒப்பந்த பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் கேட்கும் விவகாரத்தில், உங்களிடம் இருக்கும் ஆவணங்களை வழங்கும்படி அறிவுறுத்தி இருந்தது. இதனால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆவணங்களை பெற்று சென்றனர்
இந்த நிலையில், பிரதமர் அலுவலகம் ஆவணங்களை வழங்கும்படி கேட்டு இருந்ததால், அவற்றை வாங்குவதற்காக மத்திய உள்துறையை சோ்ந்த முக்கிய 3 அதிகாரிகள் பெங்களூருவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஒப்பந்ததாரா் சங்க தலைவரான கெம்பண்ணாவை சந்தித்து, அவரிடம் இருந்த 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை பெற்று சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை உள்ளிட்ட சில துறைகள் பற்றிய ஆவணங்களை மத்திய உள்துறை அதிகாரிகள் வாங்கி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 3 மந்திரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் மத்திய உள்துறை அதிகாரிகளிடம் கெம்பண்ணா வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பரபரப்பு
கர்நாடகத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான வளர்ச்சி பணிகள் பெரும்பாலும் கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்துராஜ், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறையில் தான் நடந்திருந்தது. குறிப்பாக மூத்த மந்திரி ஒருவர் வளர்ச்சி பணிக்கான டெண்டர் விடும் முன்பாகவே ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 15 சதவீத கமிஷன் பெற்றதாகவும், மற்றொரு மந்திரி 10 சதவீதம் கமிஷன் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி ஆவணங்களை மத்திய உள்துறை அதிகாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக கமிஷன் விவகாரத்தில் 3 மந்திரிகளுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெற்ற விவகாரம் தலை தூக்கி உள்ளது. ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷன் பெறும் விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் மத்திய உள்துறை அதிகாாிகளே ஆவணங்களை பெற்று சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.