சென்னை: பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், முத்துமாரியம்மன் கோயில் தெரு, அம்மா உணவகம் எதிரே கழிவுநீர் கால்வாயில் கடந்த செவ்வாய் அன்று (28-ம் தேதி) அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை சரி செய்யும் பணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த நெல்சன் (26), அதே மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (36) ஈடுபட்டனர்.
அப்போது பாதாள சாக்கடை குழியில் விழுந்து இருவரும் மயக்கமடைந்தனர். இதில், நெல்சன் மரணம் அடைந்தார். ரவிக்குமாருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த ரவிக்குமாரும் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இது ஒருபுறம் இருக்க நேற்று முன்தினம் பெருங்குடி காமராஜர் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பள்ளிக்கரணையை சேர்ந்த பெரியசாமி (40), தட்சணாமூர்த்தி (38) ஆகியோர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இழப்பீடு அறிவிப்பு
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாதவரம் பகுதியில் கழிவுநீர் குழாய் அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நெல்சன், வெ.ரவிக்குமார் ஆகியோர் கடந்த 28-ம் தேதி எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடை குழியில் விழுந்துவிட்டனர்.
அவர்கள் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நெல்சன் அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்திருந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமாரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தாருக்கும் இழப்பீடாக ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி மேலும் 2 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.