ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் ஜூலை 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக ஆட்சிபுரியும் 18 மாநிலங்களின் முதல்வர்கள், அனைத்து மாநில பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என சுமார் 300 முதல் 400 பேர் வரை கலந்துக்கொள்ள உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தெலங்கானா வகை உணவு தயார் செய்ய மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தீர்மானித்தார். இதற்காக கரீம்நகரைச் சேர்ந்த சமையல் கலைஞர் யாதம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இதனால் யாதம்மா மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு சமையல் செய்து அசத்த உள்ள யாதம்மா கூறியதாவது: சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட காலம் போய், தற்போது ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு சமைத்து போடும் காலத்தை எண்ணி மிக்க சந்தோஷப்படுகிறேன். அதிலும் பிரதமர் மோடி என் கையால் சமைத்த உணவை சாப்பிடப் போகிறார் என நினைக்கும்போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கொண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரய்ய எனும் விவசாய கூலி தொழிலாளிக்கு என்னை சிறு வயதில் மணம் முடித்து வைத்தனர். எங்களுக்கு வெங்கடேஷ் எனும் மகன் உள்ளார். ஆனால், திருமணம் ஆகி 3 வருடங்களிலேயே எனது கணவர் உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் மாமியார் கொடுமையால் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு கரீம் நகருக்கு வந்தேன். ஒரு தனியார் பள்ளியில் ஆயாவாக சில மாதங்கள் பணி செய்தேன். எனக்கு சமையல் நன்றாக தெரியும் என்பதால், சில நாட்கள் பணக்காரர்கள் வீட்டிலும், அரசியல்வாதிகள் வீட்டிலும் சமையல் செய்தேன். அப்போது வெங்கண்ணா எனும் சமையல் மாஸ்டரிடம் உதவியாளராக சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எப்படி சமைப்பது என்பதை கற்றேன். அப்போது எனக்கு 15 ரூபாய் ஊதியம். இது 50 ஆண்டுகளுக்கு முந்தைய கதை. பிறகு, படிப்படியாக நானே சில விசேஷ நாட்களுக்கும், பண்டிகைகளுக்கும், திருவிழாக்களுக்கும் சமையல் செய்து சம்பாதிக்க தொடங்கினேன்.
அனைவரும் எனது சமையலை புகழ்ந்தனர். தற்போது என்னை நம்பி 100 குடும்பங்கள் வாழ்கின்றன. தினமும் சுமார் 20 ஆயிரம் வரை உதவியாளர்களுக்கு கூலி வழங்குகிறேன். பல அரசியல் கட்சி மாநாடுகளுக்கு கூட சமையல் செய்வதால், கட்சி பாகுபாடு இன்றி பல கட்சியினர், அரசியல்வாதிகள் தங்களது வீட்டு விசேஷங்கள் உட்பட கட்சி கூட்டங்கள் வரை பலவற்றுக்கு நான்தான் உணவு தயாரிக்கிறேன். இதனால் வாரத்தில் கண்டிப்பாக 3 நாட்கள் எனக்கு வேலை இருக்கும். என்னிடம் பணி கற்றவர்கள், தாங்களாக கேட்டரிங் செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஹாஸ்டல்களுக்கு சமையல் செய்து தருகின்றனர். என் மகனை கஷ்டப்பட்டு எம்.பி.ஏ. படிக்க வைத்தேன்.
அவரும் எனக்கு கணக்கு வழக்கு பார்க்க உதவி செய்து வருகிறார். வெளிநாட்டுக்கு செல்வோர் கூட என்னுடைய உணவை பார்சல் செய்து கொண்டு செல்கின்றனர். சைவம், மற்றும் அசைவ உணவுகளை நான் நன்றாக சமைப்பதாக கூறுகின்றனர். இதனால்தான் ஹைதராபாத் வர உள்ள பிரதமர் மோடிக்கு தெலங்கானா மாநில ஸ்பெஷல் உணவு வகைகளை தயாரித்து அசத்த உள்ளேன். இது எனக்கு மிக பெருமையாக உள்ளது. என் வாழ்நாளில் இதனை மறக்க மாட்டேன் என உணர்ச்சி பொங்க கூறுகிறார் யாதம்மாள்.