சென்னை: கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. 7 முறை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
அதிமுக தனது 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நிலையில், ஒற்றைத் தலைமை கோஷமும், அதைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினைகளும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை பல உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த அக்கட்சி, முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் இன்றி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து கேட்டபோது, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜேசிடி பிரபாகர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: ஓபிஎஸ் நல்ல நோக்கத்துடன், கட்சி மற்றும் தொண்டர்கள், வேட்பாளர்களின் நலன் கருதி, உள்ளாட்சி தேர்தலுக்கான ஏ, பி படிவங்களை அனுப்புமாறு கோரி இபிஎஸ்ஸுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் இபிஎஸ், கையெழுத்திட மறுத்திருப்பது கட்சிக்கும், தொண்டர்களுக்கும் செய்துள்ள மிகப்பெரிய அநீதி.
அதிமுக வேட்பாளர்கள் முதல்முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிடுவது மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறும்போது, ‘‘அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலைசின்னம் கிடைக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. இபிஎஸ் தலைமையில் ஒற்றைத் தலைமையை அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தால் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது’’ என்றார்.