ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், பட்டப்பகலில் நடந்த கொலைச் சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்!
பட்டப் பகலில் படுகொலை!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்திலுள்ள தன்மண்டி என்ற பகுதியில் தையல் கடை நடத்திவந்தார் கன்னையா லால். சமீபத்தில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளிப்படுத்திய முன்னாள் பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் கன்னையா லால் பதிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அவருக்குப் பல தரப்பிலிருந்தும் மிரட்டல்கள் வந்ததால், அவர் கடந்த சில வாரங்களாகத் தையல் கடையைத் திறக்காமலிருந்திருக்கிறார். மிரட்டல்கள் சற்று அடங்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடையைத் திறந்திருக்கிறார். இந்த நிலையில், ஜூன் 28 அன்று மதிய வேளையில், துணி தைப்பதற்காக வந்திருக்கிறோம் என்று கூறிக் கொண்டு வந்த இருவர், கன்னையா லாலை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். பின்னர், அவரது தலையைத் துண்டித்து படுகொலையும் செய்திருக்கிறார்கள்.
கொலை செய்ததாகச் சொல்லப்படும் முகமது ரியாஸ், கெளஸ் முகமது ஆகிய இருவரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர். அந்த வீடியோவில், நபிகள் நாயகத்தைத் தவறாகப் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால், இந்தக் கொலையைச் செய்ததாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும், பிரதமர் மோடி, நுபுர் ஷர்மா ஆகியோருக்கு கொலை மிரட்டலும் விடுத்திருக்கின்றனர். இந்த வீடியோ வைரலாகப் பரவியதை அடுத்து, கொலை நடந்த அன்று இரவே வீடியோ வெளியிட்ட இருவரையும் கைது செய்தது ராஜஸ்தான் காவல்துறை. ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முகமது ரியாஸ், கெளஸ் முகமது ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டது ராஜஸ்தான் காவல்துறை.
144 தடை உத்தரவு!
இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கலவரமும், போராட்டமும் வெடித்தது. அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உதய்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், “உதய்பூரில் நடந்த கொடூரமான படுகொலைக்கு என் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து தரப்பினரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
தலைவர்களின் கண்டனம்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உதய்பூரில் நடந்த கொடூர கொலையை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்பை வெல்ல வேண்டும். அமைதியையும், சகோதரத்துவத்தையும் பேணுமாறு அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி, “ராஜஸ்தான் படுகொலைக்கு கடும் கண்டனங்கள். இந்தச் சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சட்டத்தைக் கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக நிற்பதே எங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கை” என்று கூறியிருக்கிறார்.
பா.ஜ.க எம்.பி ராஜ்யவர்தன் ரத்தோர், “காங்கிரஸ் ஆட்சியில், ராஜஸ்தான் தாலிபன் மாநிலமாக மாறிக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களைக் காங்கிரஸ் தொடர்ந்து சமாதானப்படுத்தி வருவதால், ஜிகாதிகள் இந்துக்களைக் கொலை செய்வதற்கும், பிரதமருக்கு மிரட்டல் விடுவதற்கும் துணிந்துவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “நாகரீக சமுதாயத்தைப் பயங்கரவாதத்தின் மையமாக மாற்றுவதற்கான சதி வேலைதான் இந்தக் கொலைச் சம்பவம். அறிக்கை மட்டும் விட்டுவிட்டு முதல்வர் அசோக் கெலாட் தப்பிக்க முடியாது” என்றிருக்கிறார். மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், “அசோக் கெலாட் காட்டு ராஜ்ஜியம் நடத்துவதைத்தான் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர், “எப்போதும் மதத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க, இந்த விவகாரத்தையும் அரசியலாக்க நினைக்கிறது” என்று குற்றம்சாட்டிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கன்னையா லால்!
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ராஜஸ்தான் காவல்துறை தரப்பிலிருந்து, “கன்னையா லால்மீது, இஸ்லாம் மதத்துக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இடுவதாக வந்த புகாரின் பேரில் ஜூன் 10-ம் தேதி அன்று, அவரைக் கைது செய்தோம். ஜூன் 15-ம் தேதி, தனக்குத் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வருவதாக அவர் கூறியதை அடுத்து, அந்தப் பகுதியிலுள்ள கட்சிகள், மதத் தலைவர்களை அழைத்து இந்தப் பிரச்னையைச் சரி செய்தோம். பின்னர், ஜாமீனில் வெளியான கன்னையா லால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது கொடூரமான கொலை” என்று தெரிவித்திருக்கின்றனர்.
என்.ஐ.ஏ விசாரணை!
இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சகம், இந்த வழக்கை விசாரிக்கத் தேசிய புலனாய்வு முகமையிலிருந்து (என்.ஐ.ஏ) ஒரு குழுவை ராஜஸ்தானுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தீவிரவாத அமைப்புகளின் தலையீடு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்துவருகிறார்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள். இந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, தாவத்-இ-இஸ்லாமி (Dawat-e-Islami) என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த கட்ட விசாரணைகளில் குற்றவாளிகள் குறித்த விவரங்களும், இந்தக் கொலை குறித்த மேலும் சில தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.