புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து மாநிலங்களவை செயலாளரும் குடியரசுத் தலைவர் தேர்தல் அதிகாரியுமான பி.சி.மோடி நேற்று கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 115 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் 28 மனுக்கள் முறைப்படி இல்லாததால் தாக்கல் செய்யப்படும்போதே நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 72 பேரின் 87 மனுக்களில் விதிமுறைப்படி இல்லாததால் 79 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை (ஜூலை 2) கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் அரசிதழில் வெளியாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மனுவை நிரப்பும்போது தவறு ஏற்பட்டு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், ஒவ்வொரு வேட்பாளரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
லாலு பிரசாத்..
குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்மு, சின்ஹா தவிர, மும்பையைச் சேர்ந்த குடிசைப் பகுதிவாசி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் பெயரைக் கொண்ட ஒருவர், தமிழகத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மனுதாக்கல் செய்வோருக்கு ஆதரவாக, வாக்களிக்க தகுதியுள்ள 50 பேர் முன்மொழிவதுடன் 50 பேர் வழிமொழிய வேண்டியது கட்டாயம் என்பது குறிப்பிடத் தக்கது.