அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 22-ம் தேதி இரவு தொடங்கி, அடுத்த நாள் அதிகாலை வரை ஓ.பி.எஸ் தரப்பு சட்டப் போராட்டத்தை நடத்தினர். இதன் பலனாக ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கக்கூடாது என்று தீர்ப்பைப் பெற்றது ஓ.பி.எஸ் தரப்பு… இதையடுத்து, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தனர். இதற்குப் பொதுக்குழு உறுப்பினர்களும் பலத்த கூச்சலிட்டு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், “ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வைத்தனர். அதற்காக அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமாக நடைபெறும்” என்று அறிவித்தார். இதனால், அதிர்ச்சியான ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். அப்போது, ஓ.பி.எஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் எறியப்பட்டதால், பொதுக்குழுவே ரணகளமானது.
மேலும், அன்று இரவே, பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி விரைந்தார் ஓ.பி.எஸ். அத்துடன், ஓ.பி.எஸ் சார்பில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியில் அரங்கேறிய பல குழப்பங்களை முன் வைத்து மிக நீண்ட மனு அளிக்கப்பட்டது. தர்மயுத்த காலகட்டத்தில் அணிகள் இணைப்புக்குப் பின்னர், பிரதமர் மோடி சொன்னதால்தான், துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓ.பி.எஸ் கூறியது இப்போது கவனிக்கத்தக்கது.
ஏனென்றால், தர்மயுத்தம் காலகட்டத்தில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைய வேண்டும் என்று பா.ஜ.க வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தது. ஆனால், தற்போது அதைவிட உக்கிரமாக எரியும் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில், “அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது”, “நாங்கள் அதில் தலையிட மாட்டோம்” என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிவு செய்து கொண்டே இருக்கிறார்.
அதேபோல, ஓ.பி.எஸ் டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்தபோது, ” உங்கள் கட்சி பிரச்னையை நீங்கள்தான் சரிசெய்யவேண்டும்” என்று கூறி வழியனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து அ.தி.மு.க-வில் தற்போது நடைபெறும் பிரச்னைகள் மூலம் பா.ஜ.க எதையோ சாதிக்கத் திட்டமிட்டுள்ளது ஓரளவுக்குத் தெளிவாகிறது. இதுகுறித்து அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையில் சிக்கித் தவிக்கும் சில மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
“பல மாநிலங்களில் வளர்ந்து நிற்கும் மாநிலக் கட்சிகளை விழுங்கிதான் பா.ஜ.க செழிப்பாக வளர்கிறது. உதாரணமாக மகாராஷ்டிரா-வில் சினசேனா, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அவர்களின் தோளிலேயே வளர்ந்த பா.ஜ.க, பின்நாளில், அவர்களையே விழுங்கி, ஆட்சி அமைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது.
அதன்படிதான், தமிழ்நாட்டில் தற்போது அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தின் தயவில் 4 சட்டமன்ற இடங்களை வென்றுள்ளது. பின்னர், அ.தி.மு.க சரியான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை என்று எங்களையே வசைபாடியது. இது ஆழம் பார்க்கும் முயற்சிதான். இதற்குத் தக்க பதிலடியை நாங்கள் கொடுத்ததும் சரண்டர் ஆனது. தற்போதுகூட, ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நாங்கள் பேசமாட்டோம் என்று தாமாகவே பா.ஜ.க பேசுவதும், பிரச்னையில் தலையிடாமல் அமைதியாக இருப்பதும் சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால், பா.ஜ.க எங்களை வைத்துத்தான் தமிழ்நாட்டில் வளர திட்டமிட்டுள்ளது என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.
இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது. ஆனால், எங்களின் தலைமை தற்போது இரண்டாகப் பிரிந்துள்ளனர். இது பா.ஜ.க-வுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால்தான், தி.மு.க தலைவர்கள், அ.தி.மு.க இருக்கவேண்டும் என்று ஓப்பனாகவே பேசுகிறார்கள்” என்றனர் விரிவாக…
அதிமுக சரிந்தால், அக்கட்சியின் வாக்குகள் திராவிட கட்சிகளுக்குள்ளே விழுமா, அல்லது தேசிய கட்சிகளுக்கு மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!