நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ,பாதிக்கப்பட்டுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு இன்று முதல் 7,500 ரூபாவை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் மேம்பாட்டுக்காக பங்களிப்பை வழங்கிவரும் 15 இலட்ச அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சமான ஓய்வூதியம் பெறுவோருக்கும் ,கைத்தொழில் துறையைச்சார்ந்த மற்றும் ஏனைய தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும் ,எதிர்வரும் காலங்களில் நிவாரணம் தற்போது முன்னெடுக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் பிரதி பலனாக கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதுதொடர்பாக தெரிவிக்கையில், வறுமை கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இதற்கான திட்டம் செயற்படுத்தப்படும்,
இவ்விரு வங்கிகளும் தலா 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி திட்டத்தின் கீழ் உதவி பெறும் குடும்பங்களுக்கும் அதாவது முதியோருக்கான நிவாரண கொடுப்பனவு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணக்கொடுப்பனவை பெறுவோர் மற்றும் சமுர்த்தி உதவியை பெறாத பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1.1 மில்லிய்ன் குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ளனர். இவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையிலேயே இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பகிறது.
சமுர்த்தி பெறுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் ரூ.7,500 ஆக அதிகரிக்கப்படும் என்றும், நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.