உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபி குறித்த நுபுர் சர்மாவின் விமர்சனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவர் பாஜக.வில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்கடை நடத்தும் கன்னையா லால் டெனி (40) என்பவர் சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்காக, கன்னையாவை, ராஜஸ்தானைச் சேர்ந்த முகம்மது ரியாஸ் அத்தரி (38), கவுஸ் முகம்மது (39) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகலில் கொலை செய்தனர். இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. கன்னையாவின் மகன் அளித்த புகாரில் பேரில், கொலையாளிகள் மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், கன்னையா லாலுக்கு அச்சுறுத்தல் இருந்தது தெரிந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் உதய்பூர் ஐஜி, காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு: கன்னையா கொலை விசாரணையை தொடங்கியது என்ஐஏ. கன்னையாவை கொலை செய்த பின் ரியாஸ் அத்தரி, முகமது கவுஸ் ஆகிய இருவரும் உதய்பூரின் சபேதியா பகுதியிலுள்ள எஸ்.கே. இன்ஜினியரிங் தொழிலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அமர்ந்து கொலைக்கான விளக்கத்தை வீடியோவாக பதிவாக்கி வாட்ஸ் அப்பில் வைரலாக்கினர். பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் கொண்ட ரியாஸ் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவை நடத்தியுள்ளார். இந்தக் குழுவில் உறுப்பினர்களையும் என்ஐஏ விசாரிக்கத் தொடங்கி உள்ளது. இவர்களில் ஒருவராக இருந்த முகம்மது முஜீப் தனது ஐந்து சகாக்களுடன் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் 12 ஆர்டிஎப் வெடிகுண்டுகளுடன் சிக்கினார். இவர்கள் ‘அல் சுபா’ எனும் பெயரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது.