சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சிப் பொறுப்பை தனது ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் எந்த முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. எனவே ஓ.பன்னீர்செல்வம் இந்தக் கட்சியினுடைய பொருளாளர், எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் என்று கட்சியின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
அதன்பின்னர் ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கைகளிலும் அவர் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டு வந்தார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று எடப்பாடி எழுதிய கடிதத்தில் கூட, ” கடந்த 23-ம் தேதி கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல” என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், ஈபிஎஸ் தன்னை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார்.