காவிரி விவகாரம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்!

ஜூலை 6ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. மேகதாது அணை விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை அமைக்க கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என கர்நாடக அரசு தரப்பில் ஆணையத் தலைவரிடம் சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு ஆணையம் அனுமதி அளித்த நிலையில் அதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தது. மேகதாது விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இவ்விவகாரத்தை விவாதிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது என தமிழக அரசு வலியுறுத்தியது. இது தவிர  உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதனால் இக்கூட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படாமல் இரண்டு முறைக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூலை 6ம் தேதி ‘காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை’ நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அக்கூட்டத்தில் மேகதாது விவகார தொடர்பாக விவாதிக்க கர்நாடகா அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

image
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றுள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர் கோவிந்த கரஜோலா உடன் இருந்தார்.

இச்சந்திப்பின்போது காவிரி விவகாரம், மேகதாது அணை கட்டக்கூடிய விவகாரம், அதற்கான அனுமதி வழங்குதல், மாண்டோவி நதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

மேகதாது அணை கட்டவோ அல்லது அது குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்பட்ட ஆணைய கூட்டத்தில் விவாதிக்கவோ கூடாது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் கர்நாடகா முதலமைச்சர் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: ஆட்டோ ஓட்டுநர் டூ முதல்வர்’- பிளான் போட்டு மகாராஷ்ட்ரா முதல்வரான ஏக்நாத் ஷிண்டே!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.