குல்காம்: காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் மிர் பஜார் அருகில் உள்ள நவபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தப் பகுதிக்கு உள்ளூர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. அந்த யாத்திரை செல்லும் பாதைக்கு அருகில் நவபோரா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்தனர். பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றிவளைத்ததும், தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படை வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பு சண்டையில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் யாசிர் வானி மற்றும் ரயீஸ் மன்சூர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன்மூலம் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.
உயிரிழந்த 2 பேரில் யாசிர் என்பவர் பல தீவிரவாத வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர்தான் ரயீஸ் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.