“தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சியுடன் துணைமுதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை” – சொல்கிறார் சரத் பவார்

மகாராஷ்டிராவில் நேற்று புதிய அரசு பதவியேற்றது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற நிலையில், தான் அமைச்சரவையில் இடம் பெறமாட்டேன் என்று சொன்ன தேவேந்திர பட்னாவிஸ் பின்னர் மனதை மாற்றிக்கொண்டு அமைச்சரவையில் இடம் பெறுவதாக அறிவித்தார். அதோடு துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார். பாஜக தலைவர்கள் ஜே.பி நட்டா, அமித் ஷாவின் நிர்ப்பந்தம் காரணமாகவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “துணை முதல்வர் பதவியை ஏற்கும் போது தேவேந்திர பட்னாவிஸ் மகிழ்ச்சியுடன் இல்லை. அவர் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அது அவரின் முகபாவணையில் இருந்தே தெரிந்தது. பட்னாவிஸ் நாக்பூரிலிருந்து வந்தவர்.

சரத்பவார்

அதோடு ஸ்வயம் சேவக்காக ஆர்.எஸ்.எஸ்.அமைப்போடு சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். அப்படி இருக்கும் போது, அங்கிருந்து உத்தரவு வந்தால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சிவசேனா அதிருப்தி கோஷ்டி தங்களது தலைவர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாஜக மேலிடம் உத்தரவிட்டதால் ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது ஷிண்டேயிக்கே தெரியாது என்று நினைக்கிறேன். 5 ஆண்டுகள் முதல்வராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதுதான் இரண்டாவது பெரிய ஆச்சரியம். அவர் துணை முதல்வர் பதவியை ஏற்பார் என்று நான் நினைத்துப்பார்க்கவில்லை. ஆனால் கட்சி மேலிடம் உத்தரவிட்டதால் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. சிவசேனாவில் இருந்து விலகியதை நியாயப்படுத்துவதற்காகவே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் சிவசேனாவில் இருந்து விலகியதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறுகின்றனர். சிவசேனாவில் இருந்து விலகுவது தொடர்பாக நீண்ட நாள்களாக திட்டமிட்டு இக்காரியத்தை செய்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். வரும் தேர்தலில் மகாவிகாஷ் அகாடி கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை.

மத்திய அரசு ஏஜென்சிகளை பாஜக அரசு தவறுதலாக பயன்படுத்துகிறது. வருமான வரித்துறையிடமிருந்தும் எனக்கு கடிதம் வந்தது. 2004, 2009, 2014ம் ஆண்டு தேர்தலில் நான் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்து கேட்டு வருமான வரித்துறை எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.