வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி சிவசேனா கட்சி மனு அளித்த நிலையில், அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான முந்தைய கூட்டணி அரசுக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே உள்பட போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகர் நோட்டீஸ் அளித்தார். இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதில், ஜூலை 11 வரை 16 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனால், ஏக்நாத் ஷிண்டேவின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் மற்றும் பா.ஜ., இணைந்து புதிய அரசை அமைத்துள்ளது. இதில் நேற்று (ஜூன் 30) ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என இன்று உச்சநீதிமன்றத்தை சிவசேனா தரப்பு மீண்டும் நாடியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமோ, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கை உடனே விசாரிக்க முடியாது; ஜூலை 11ம் தேதியன்று தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தது. இது சிவசேனாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Advertisement