'நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கணும்!'- உச்ச நீதிமன்றம் காட்டம்!

நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கள் ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது என, உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்தனர். இது அரபு நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, பாஜகவின் அடிப்படை பொறுப்பில் இருந்து இருவரையும் நீக்கி, அக்கட்சித் தலைமை உத்தரவிட்டது.

குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகள், நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு இந்தியாவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்துத் தெரிவித்த நுபுர் சர்மா மீது, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் தலைநகர் டெல்லிக்கு மாற்றக் கோரி, நுபுர் சர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது. உதய்பூரில் நடைபெற்ற துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது செயல்பாடுகளே காரணம் என குற்றம் சாட்டினார்.

நுபுர் சர்மா மன்னிப்பு கேட்டதும், நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்களை திரும்பப் பெற்றது எல்லாம் மிகவும் கால தாமதமானது என்றும், நுபுர் சர்மாவிற்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் இருந்த போதிலும் அவரை ஏன் டெல்லி காவல் துறை கைது செய்யவில்லை? என்றும், நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார்.

நுபுர் சர்மா தனது செயல்பாட்டிற்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நுபுர் சர்மா நடந்து கொண்ட விதம் அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக் கேடானது என்றும், நீதிபதி காட்டமாகத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு தனியாளாக நுபுர் சர்மா தான் காரணம். ஆனால் நிவாரணம் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் கொடுத்திருக்கிறாரா? என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதை அடுத்து, அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றக் கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் இனி அவர் நாடு முழுவதும் உள்ள வழக்குகள் அனைத்தையும் நேரில் சென்று எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.