புதுடெல்லி: “முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் கோபத்தை தூண்டியுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கோர வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். நுபுர் சர்மா இறைதூதர் நபிகள் பற்றி பேசிய கருத்தை ஆதரித்து டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன்குமார் ஜிண்டால் தனது ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டு நீக்கினார்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடு முழுவதும் ஆங்காங்கே முஸ்லிம் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக உதய்பூரில் தையல் தொழிலாளி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
உதய்பூர் படுகொலை: நுபுர் சர்மாவின் விமர்சனத்தை ஆதரித்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்ணையா லால் டெலி என்பவர் கடந்த ஜூன் 10-ம் தேதி, சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து இருந்தார். அதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் கன்னையா லால் மீது காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தனர். இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டுவதாகவும், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கன்னையா லால் காவல்துறையில் புகார் கூறி இருந்தார்.
இதனிடையே ஜூன் 28-ம் தேதி தையல் கடையைத் திறந்து பணி செய்து கொண்டிருந்த கன்னையா லாலை இழுத்துத் தெருவில் போட்டு, அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்த இருவர், அக்கொடூரச் செயலை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவாக்கி பகிரங்கமாக வெளியிட்டனர்.
உச்ச நீதிமன்றம் கண்டனம்: இந்நிலையில், நுபுர் சர்மாவின் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், “தொலைக்காட்சி விவாதத்தில் நுபுர் சர்மா பேசியதை நாங்கள் கண்டோம். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றுவேறு அடையாளப்படுத்தியுள்ளார். இது அவமானகரமானது. இதற்காக அவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நுபுர் சர்மா தன் மீதான அத்தனை வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் தான் நீதிமன்றம் இந்தக் கருத்தைக் கூறியுள்ளது.
நீதிபதி சூரிய காந்த் மேலும் கூறுகயில், “மனுவில் நுபுர் சர்மா தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளார். உண்மையில் அவருக்கு அச்சுறுத்தலா இல்லை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்று நாம் பார்க்க வேண்டும். நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு இந்தப் பெண் ஒரு தனி நபராகக் காரணமாகியுள்ளார்” என்று கூறியுள்ளார்.