டிஜிட்டல் தலையங்கம்: பிளாஸ்டிக் அரக்கனை வேரறுப்போம்!

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் நாடு முழுவதும் தடை அமலாகிறது. பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கெனவே வெவ்வேறு அளவில் இதுபோன்ற தடைகள் இருந்தாலும், பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்தது. அதனால் தடையை முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் இருந்தது.

இப்போது பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைப்பது, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு என்று எல்லாவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதால், முழுமையாகத் தடையை அமல்படுத்தும் சூழல் வாய்த்திருக்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தும். பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் உறைகள், காது குடையும் பட்ஸ், பலூனில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் குச்சி, அலங்காரத்துக்குப் பயன்படும் தெர்மகோல், பிளாஸ்டிக் தட்டு, கப், டம்ளர், கரண்டி, முள்கரண்டி, ஐஸ்க்ரீம் ஸ்டிக், கத்தி, ஸ்ட்ரா உள்ளிட்ட பல பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

பிளாஸ்டிக்

இந்தத் தடை முறையாக அமலாகிறதா என்பதைக் கண்காணிக்க தேசிய அளவிலும், மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் புகார் செய்யவும் வசதிகள் உண்டு. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கவும் வழி உண்டு. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள், பிளாஸ்டிக் உறைகளை அதிகம் பயன்படுத்தும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு ஏற்கெனவே இந்தத் தடை குறித்து முறையான அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்கள் அதிக அளவில் கிடைப்பதில் சிரமம் உள்ளது என்று பல நிறுவனங்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக்குடன் ஒப்பிடும்போது இவற்றின் விலையும் அதிகம். பிளாஸ்டிக்கிற்கு மாற்றைத் தேடும்போது எல்லாப் பொருட்களின் விலையும் உயரும் என்றும் காரணம் சொல்கிறார்கள். என்றாலும், தடையை அமல் செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது.

மூங்கில், துணி, காகிதம், மரம் மற்றும் உலோகத்தில் மாற்றுப்பொருட்கள் உற்பத்தியைப் பெருக்குவதில் ஏற்கெனவே முனைப்பு காட்டப்பட்டுள்ளது.

மூங்கில் டூத் பிரஷ்கள்

இந்தியா ஓராண்டில் 2.4 லட்சம் டன் அளவுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்துவருகிறது. மண், நிலத்தடி நீர், கடல் என எங்கும் வியாபிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் அரக்கன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். ஏதோ ஒரு புள்ளியில் இதைத் தடுக்கும் நடவடிக்கையைச் செய்யாவிட்டால், நாம் எதிர்கால சந்ததிகளுக்கு வரலாற்று துரோகம் இழைப்பதாக அர்த்தம்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட பொருள்கள்

‘பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாமல் வாழ்க்கை சாத்தியமில்லை’ என்று வாதிடும் அளவுக்கு நம் வாழ்க்கைமுறை மாறியிருக்கிறது. அதிகாலை தூங்கி எழுந்ததும் கையில் பிடிக்கும் டூத் பிரஷ் தொடங்கி, இரவு தூங்கச் செல்லும்போது ஆன் செய்யும் கொசுவிரட்டி மருந்து இயந்திரம் வரை எல்லாம் பிளாஸ்டிக்தான். ஆனால், இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை பிளாஸ்டிக் துணையின்றிதான் நாம் வாழ்ந்தோம்.

சூழலைக் காப்பதற்காக ஒவ்வொரு தனிமனிதனும் மீண்டும் அந்த வாழ்க்கைமுறையை நாடிப் போவதே நன்மை தரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.