டெல்லி: தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2021 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மே மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 9 மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா தன்னுடைய தேவைகளை இறக்குமதி மூலமே நிறைவேற்றி கொள்கிறது. தங்கத்தை இறக்குமதி செய்வதில் உலகத்திலேயே 2வது பெரிய நாடு இந்தியா. தற்போது சமீபத்தில் ஏற்பட்டுள்ள சில மாறுதல்கள் காரணமாக அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்ந்து தற்போது இந்தியாவில் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனிடையே தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும். நாட்டில் தற்போது தங்கம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையானது அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்துள்ளது. எனவே, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் தங்கம் இறக்குமதியை குறைக்கவும் தங்கம் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போது, நடப்பு கணக்கு பற்றாக்குறை மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. அதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.இன்றைய தங்கம் விலை:சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,785-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65-க்கு விற்பனை ஆகிறது.