மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் பாஜக தலைமையின் சில அரசியல் மற்றும் சாதிய கணக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடந்து வந்த அரசியல் திருப்பங்கள் முடிவுக்கு வந்து முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகினார். இதன் பிறகு எதிர்பார்க்கப்பட்டது போலவே பாஜக- அதிருப்தி சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. புதிய அரசியல் மகாராஷ்டிர மாநில பாஜகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் அடுத்த முதல்வராகப் பதவியேற்பது ஏறக்குறைய உறுதியாகி இருந்தது.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் திடீர் திருப்பம் நிகழ்ந்தது. ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியில்வந்த தேவேந்திர பட்னவிஸ் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று தெரிவித்தார். அமைச்சரவையில்தான் இடம்பெறமாட்டேன் என்றும், அதேசமயம் அரசுக்கு துணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து பட்னவிஸ் கட்டாயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அந்தக் கோரிக்கையை பின்னர் பட்னவிஸ் ஏற்றுக் கொண்டார்.
நேற்று மாலை 7:30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பெரிய மனதுடன் பட்னாவிஸ் ஏற்றுக்கொண்டதாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தேவேந்திர பட்னவிஸுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மாறிப்போன முடிவு
பாஜக தலைமையின் இந்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்க ஷிண்டே முடிவு செய்தபோதே அவர் துணை முதல்வர் பதவியை கோரியதாகவே கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விரும்பிப் பெறவில்லை என்றும், இது பாஜக தலைமையின் முடிவு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
2019-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு சிவசேனா, பாஜகவை கைவிட்டு தேசியவாத காங்கிரஸுடன் கைகோர்த்தபோது பட்னவிஸ் என்சிபியின் அஜித் பவாருடன் சேர்ந்து ஆட்சியமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் அதிகாரத்திற்காக ஆசைப்படும் கட்சியாக பாஜக பற்றிய எண்ணம் உருவானது. தற்போது முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் பாஜகவின் முடிவு அந்த எண்ணத்தை மாற்றும் என நம்பப்படுகிறது. சிவசேனா உடைந்தபோது சிவசேனாவுக்கு மீண்டும் முதல்வர் பதவியை பெற முடியுமா என ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே சவால் விட்டார். எனவே முதல்வர் பதவிக்காக நடைபெறும் நாடகம் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்க ஏதுவாக பாஜக விரும்பியதாக கூறப்படுகிறது.
தாக்கரே பிடி தளரும்?
இதுமட்டுமின்றி விரைவில் மும்பை உட்பட மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்குள் சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டேவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவருக்கு முதல்வர் பதவி உதவும் என பாஜக எண்ணுகிறது. சட்டப்பேரவைக்கு வெளியேயும் சிவசேனாவை ஷிண்டே பிடியில் கொண்டு வருவதன் மூலம் உத்தவ் தாக்கரே குடும்பத்தை சிவசேனா கட்சியில் இருந்து முழுமையாக ஓரம்கட்ட வாய்ப்பு ஏற்படும் என்பதும் பாஜகவின் கணக்காக கூறப்படுகிறது.
சாதிய கணக்கு?
இதனை தவிர பாஜக தலைமை கவனமாக இருக்கும் சாதிய கணக்கீடும் இந்த முடிவில் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க மராத்தா சமூகத்தினரின் கட்சியாக சிவசேனா விளங்குகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த முறை அவர் முதல்வர் பதவியேற்ற பிறகு மராத்தா அல்லாத பிற்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற மொழி பேசும் மக்களுக்கு பாஜகவில் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக மராத்தா சமூகத்தினரிடம் எண்ணம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர பாஜகவில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள தேவேந்திர பட்னவிஸ் மராத்தா வாக்கு வங்கிக்கு எதிரான வாக்குகளை திரட்டி பெரும் வெற்றி பெற்றவர், அத்துடன் திறமையான நிர்வாகி. ஆனால் இந்துத்துவா கொள்கையுடன் நெருங்கிய எண்ணவோட்டம் கொண்ட மராத்தா சமூகத்தினர் பாஜகவிடம் இருந்து விலகிச் சென்று சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் வாக்காளர்களாக மாறுவதை பாஜக தலைமை விரும்பவில்லை.
இதன் காரணமாகவே சிவசேனாவின் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஷிண்டேவை துணை முதல்வராக்கினால், தேவேந்திர பட்னவிஸை முதல்வராக்க வேண்டும். அப்படியானால் ஏற்கெனவே கூறியபடி ஜாதிய கணக்கு மாறக்கூடும்.
அதேசமயம் பாஜகவைச் சேர்ந்த மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கினால் வாக்குறுதி அளித்தபடி ஷிண்டேவை துணை முதல்வர் ஆக்க வேண்டும். அப்போது பட்னவிஸ் அமைச்சரவையில் இடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டு விடும். இதுவும் பாஜகவின் வாக்கு வங்கியை பாதிக்கக்கூடும். எனவே மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராகவும், தேவேந்திர பட்னவிஸை வலிமையான துறைகள் கொண்ட துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்க செய்ய பாஜக தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் இந்த பார்முலா பாஜக- சிவசேனா கூட்டணிக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் எனவும் பாஜக தலைமை நம்புகிறது.