சென்னை: சென்னையில், கடந்த 7 நாட்கள் சிறப்பு சோதனை மேற்கொண்டு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 38 வழக்குகளை பதிவு செய்துள்ள காவல்துறையினர், 54 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில்,காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 24.06.2022 முதல் 30.06.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 54 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 44 கிலோ 735 கிராம் எடை கொண்ட கஞ்சா, 570 கிராம் கஞ்சா ஆயில் (Hashis) 23 MMDA மாத்திரைகள், 12 LSD ஸ்டாம்புகள், 3200 ரூபாய் பணம், 3 செல்போன்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.