இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. இதனால், 4 ஆண்டுகளில், 5வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டில், கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவி வருகிறது. அங்கு சித்தாந்த ரீதியில் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் கூட்டணியை வைத்துக் கொண்டு, 12 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்தவர், பெஞ்சமின் நேதன்யாகு. இவர் லிகுட் கட்சியின் தலைவர் ஆவார்.
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் 2 ஆண்டுகளில் நடந்த 4வது பொதுத் தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து அமைந்த கூட்டணி ஆட்சியில், வலதுசாரி யாமினா கட்சித் தலைவரான நப்தாலி பென்னட், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13 ஆந் தேதி பிரதமராக பதவி ஏற்றார்.
பானி பூரி தண்ணீரால் காலரா – பானி பூரி விற்க அதிரடி தடை!
அரபுப் பிரிவை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசாக நப்தாலி பென்னட் அரசு அமைந்தது. ஆனால் அது சிறுபான்மை அரசாகி, ஓராண்டு காலத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.இதை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு அங்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 92 எம்.பி.க்கள் வாக்கு அளித்தனர். ஒருவர் கூட நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக வாக்கு அளிக்கவில்லை. இதனால் தீர்மானம் எளிதாக நிறைவேறியது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
இஸ்ரேல் நாட்டில் மிகக்குறுகிய காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெயரை நப்தாலி பென்னட் பெற்றுள்ளார். அவரது அரசில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த யாயிர் லாபிட், காபந்து அரசின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அந்த நாடு 4 ஆண்டுகளில் 5வது முறையாக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று நப்தாலி பென்னட் அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.