ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால், தான் எந்த கருத்தை கூறினாலும் அந்த அதிகாரம் தனக்கு கைக்கொடுக்கும் என நுபூர் ஷர்மா நினைத்தாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
பாஜகவின் நுபூர் சர்மா முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தியாவிலும் பல இடங்களில் போராட்டங்களும், கலவரமும், வன்முறையும் வெடித்தது. இதனை தொடர்ந்து நுபூர் சர்மாவிற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இப்படி தனக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என நுபூர் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனக்கு எதிராக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களுக்கு விசாரணைக்காக சென்று வருவது பாதுகாப்பானதாக இருக்காது என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நுபூர் சர்மாவிற்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், நுபூர் சர்மாவிற்கு ஆபத்து இருப்பதாக கூறினார். அப்போது கோபமடைந்த நீதிபதிகள், நுபூர் ஷர்மாவும் அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது. ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதற்கு தனியாளாக நுபூர் சர்மா தான் காரணம். ஆனால் நிவாரணம் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கு அச்சுறுத்தல் கொடுத்திருக்கிறாரா என கேட்டனர்
உதய்பூரில் நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது செயல்பாடுகளே காரணம். நாங்களும் தொலைகாட்சியில் நுபூர் சர்மா பேசியதை பார்த்தோம். அதில் நுபுர் சர்மா நடந்துகொண்ட விதம் அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது என நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளால் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
நுபூர் ஷர்மா தனது கருத்துக்காக உடனடியாக மன்னிப்பு கேட்டு விட்டார் என நுபூர் சர்மா வழக்கறிஞர் கூறிய போது, நுபூர் சர்மா மன்னிப்பு கேட்டதும், நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்களை திரும்பப் பெற்றது எல்லாம் மிகவும் கால தாமதமானது.
நுபுர் சர்மாவிற்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் இருந்தபோதிலும் அவரை ஏன் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்படவில்லை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். டெல்லி காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஏற்கனவே ஆஜராகி இருப்பதாக நுபூர் ஷர்மா தரப்பு வழக்கறிஞர் கூறிய போது மேலும் கோபமடைந்த நீதிபதிகள், எங்களை வாயைத் திறக்க வைக்க வேண்டாம். இதுவரை விசாரணையில் என்ன நடந்தது? உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும். அது தானே? இந்த மாதிரியான நபர்கள் ஒருவித “அஜெண்டா” உடன் தான் செயல்படுகிறார்கள். மலிவான கீழ்தரமான விளம்பரத்தை தேடுவதற்காக மோசமான நோக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும் போது ஏன் இத்தகைய தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, நுபூர் சர்மாவின் கருத்துக்கள் அவரது பிடிவாதமான மற்றும் திமிர்பிடித்த தன்மையைக் காட்டுகின்றன. நுபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உறுதிபட கூறினர். அவர் ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் என்பதால் தான் எந்த கருத்தை கூறினாலும் அந்த அதிகாரம் தனக்கு கைக்கொடுக்கும் என நினைத்தாரா என கேட்ட போது தொலைகாட்சி விவாதித்தில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு மட்டுமே பதிலளித்தார் என நுபுர் சர்மா வழக்கறிஞர் சொல்ல, அப்படி என்றால் ஏன் அந்த நெறியாளர் மீது வழக்கு பதியவில்லை என நீதிபதிகள் கேட்டனர்.
நுபூர் சர்மாவின் நிலை தொடர்ந்தால் நாட்டில் எந்த குடிகமனுக்கும் எந்த உரிமை இருக்காது என நுபுர் சர்மா தரப்பு வழக்கறிஞர் சொன்னதற்கு ஜனநாயக நாட்டில் பேசும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதாவது நாட்டில் புல் வளர்வதற்கும் உரிமை உண்டு, அந்த புல்லை கழுதை தின்பதற்கும் உரிமை உண்டு என நீதிபதிகள் கூறினர்
இறுதியாக நுபூர்சர்மாவின் வாதங்களும் வார்த்தைகளும் நீதிமன்றத்தில் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாததால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிரான வழக்குகளை ஒன்றாக இணைத்து டெல்லிக்கு மாற்ற கோரிய நுபூர் சர்மாவின் மனுவை விசாரிக்க இயலாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
நீதிமன்றம் நுபூர் சர்மாவின் வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதால் இனி அவர் நாடு முழுவதும் உள்ள வழக்குகள் அனைத்தையும் எதிர் கொண்டு தான் ஆகவேண்டும்.
இதையும் படிக்கலாம்: உதய்பூர் படுகொலை: கொலையாளிகளுக்கு ஜூலை 13 வரை நீதிமன்ற காவல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM