சினிமா ஆகிறது செஞ்சிக்கோட்டை மர்மங்கள்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்கிரீன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஏலியன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் செஞ்சி. கணேஷ் சந்திரசேகர் இயக்கி உள்ளார். ஹரீஷ் ஜிண்டே ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த கெசன்யா என்கிற மாடல் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குனர் கணேஷ் சந்திரசேகரும் நடித்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறியதாவது : செஞ்சி என்கிறபோது செஞ்சிக்கோட்டை நினைவிற்கு வருகிறது. செஞ்சி என்றாலே அதில் உள்ள மர்மங்களும் புதைக்கப்பட்ட வரலாற்று அதிசயங்களும் நினைவிற்கு வரும். அதனால்தான் அதை நினைவூட்டும் வகையில் செஞ்சி என்று படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறோம்.

செஞ்சிக்கோட்டை பற்றி வரலாற்றுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. பல்வேறு மன்னர்கள் செஞ்சி மீது படையெடுத்து உள்ளார்கள். மராட்டியர்கள், பீஜப்பூர் சுல்தான் போன்றவர்களின் பல படையெடுப்புகளை அந்தக் கோட்டை சந்தித்துள்ளது . அதற்குப் பின்னே ஏதோ செல்வங்களும் பொக்கிஷங்களும் இருந்திருக்க வேண்டும். இந்த அனுமானத்தைக் கற்பனை ஆக்கி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .

அதாவது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையல் இருக்கிற இடம் பற்றிய ரகசியத்தை அறியும் குறிப்புகள் இக்கால மனிதர்களுக்குக் கிடைக்கிறது. கால மாற்றங்களுக்குப் பிறகு இவர்கள் அடைந்திருக்கும் அறிவால் அதை அறிய முடிகிறதா?அந்தப் புதையல் என்ன? என்று அந்தப் பொக்கிஷம் தேடிச் செல்கிற பயணத்தில் பல திடுக்கிடும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன .அதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்திற்காகச் செஞ்சிக்கோட்டை, பாண்டிச்சேரி, கோயம்புத்தூரில் உள்ள கிராமங்கள் ,கேரளாவில் கல்லார் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள சித்ராஞ்சலி ஸ்டுடியோவில் அரங்கமைத்து அங்கே 25 நாட்கள் படம் பிடித்திருக்கிறோம்.

இவ்வாறு இயக்குனர் கணேஷ் சந்திரசேகர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.