கடந்த மாதம் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட டெய்லர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இஸ்லாமியர்கள் இருவரால் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,“ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டணத்தைத் தொடர்ந்து காங்கிரஸ், “நாடு முழுவதும் நடந்த உணர்ச்சிகரமான தூன்டுதலுக்கு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஒருவரே பொறுப்பு என்றும், அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் நீதிமன்றம் மிகவும் சரியாகத் தெளிபடுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கள், அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது” எனக் கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அகில இந்திய மஸ்ஜிலிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் மட்டும் தண்டனையல்ல. இனிமேலாவது பிரதமர் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிடுவாரா? நீங்கள் நூபுர் ஷர்மாவுக்கு மட்டும் பிரதமர் அல்ல. கிட்டத்தட்ட 20 கோடி முஸ்லிம்களைக் கொண்ட 133 கோடி பலம் கொண்ட இந்தியாவின் பிரதமர் நீங்கள் என்பதை புரிந்து செயல்படுங்கள். இன்னும் எவ்வளவு காலம் நுபுர் ஷர்மாவை காப்பாற்றுவீர்கள்?” என பிரதமர் மோடியைச் சாடியிருக்கிறார்.