ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஒரு பெரும் புயலே வீசிக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதலால் அதிமுக இரண்டுபட்டுக் கிடக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்ய ஒரே களேபரமாக முடிந்தது. மேலும், ஜூலை 11ம் ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து கண்டிப்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பி.எஸ் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பும் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓ.பி.எஸ் தரப்பு செயல்பாடுகள் கட்சி உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக இருப்பதாகவும் எம்.ஜி.ஆர் நோக்கத்துக்கு எதிராக இருப்பதாகவும் இ.பி.எஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் 378 பக்கங்கள் கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இ.பி.எஸ் தரப்பு இந்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: “பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோரது ஆதரவு எங்கள் பக்கம் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடத்தப்பட்டது. இதில் ஓ.பி.எஸ் தரப்பினருடைய நடவடிக்கைகள், அ.தி.மு.க எதற்காகத் தொடங்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கத்துக்கு எதிராக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அவர்களின் செயல்பாடுகள், கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆர்-ன் நோக்கத்துக்கும் எதிராகவும் இருக்கிறது.” என்று ஓ.பி.எஸ் தரப்பு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இ.பி.எஸ் மனுவில் கூறியிருப்பதாவது: “பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சியின் தலைமை குறித்து விவாதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருப்பது, அதிமுக கட்சி விதிகளில் இல்லாத வீட்டோ அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்குவது போல இருக்கிறது. இது கட்சியின் அடிப்படை விதிகளை மீறி ஒரு தனி நபருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது போல இருக்கிறது.
அ.தி.மு.க-வை பொறுத்தவரை பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதனைச் செயல்படுத்தக்கூடிய இடத்தில்தான் முக்கியமான நபர்கள் இருக்கிறார்கள். தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவிப்பது தவறானது.
இந்த மேல்முறையீடு மனு விசாரித்து தீர்ப்பு வரும் வரை சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் . எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“