குடும்பங்களின் சிறப்பை உணர்த்தியவர் – ‛சகலகலா' விசு பிறந்தநாள் ஸ்பெஷல்
தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் விசு. மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தன் சினிமா வாயிலாக குடும்பங்களின் மகத்துவத்தை எளிமையாக எடுத்துரைத்தவர். இன்று அவர் நம்மோடு இல்லை. ஆனால் அவரின் படைப்புகள் காலத்திற்கும் பேசப்படும். மரக்காணத்தில் 1945ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் விசு. இன்று அவரின் பிறந்தநாள். எம்.ஆர்.விஸ்வநாதன் என்கிற விசு சினிமாவில் கடந்த வந்த பாதையை சற்றே ரீ-வைண்ட் செய்து பார்ப்போம்…
மேடை நாடகங்களின் மூலம் திரைத் துறைக்குள் நுழைந்தவர் விசு. இயக்குநர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்து தனது விடா முயற்ச்சியால் தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டார். பாலசந்தரின் உதவியாளர்களான அமீர்ஜான், சுரேஷ்கிருஷ்ணா, வசந்த் போன்ற வெற்றி இயக்குநர்களின் வரிசையில் நடிகர், கதைவசனகர்த்தா, இயக்குநர் என்ற பன்முகத் தன்மையோடு பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கின்றார் விசு. இவருடைய நகைச்சுவை கலந்த வசனமும் அவற்றை ஏற்ற இறக்கத்தோடு பேசும் இவரது பாணியும் வெகுவாக தமிழ் ரசிகர்களை கவர்ந்ததென்றே சொல்ல வேண்டும்.
இவர் நடிகராக அறிமுகமான முதல் திரைப்படம் “குடும்பம் ஒரு கதம்பம்” இத்திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவரும் இவரே. படத்தை இயக்கியவர் இயக்குநர் எஸ்.பி முத்துராமன். இவருடைய மேடை நாடகங்களான “பாரதமாதாக்கு ஜே”, “சதுரங்கம்” என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிப்பில் சினிமாவாக வெளிவந்தது. “மோடி மஸ்தான்” என்ற நாடகம் தான் இவருடைய இயக்கத்திலேயே “மணல்கயிறு” என்ற திரைப்படமானது. தொடர்ந்து ‛‛டௌரி கல்யாணம், அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, சகலகலா சம்மந்தி, வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை, பட்டுக்கோட்டை பெரியப்பா, வா மகளே வா'' உள்ளிட்ட படங்கள் அவரை பேச வைத்தது.
சினிமாவைத் தவிர சின்னத் திரையிலும் இவருடைய பணி பேசும்படியாகவே இருந்தது. தனியார் தொலைக்காட்சியில் “அரட்டை அரங்கம்” என்ற மேடை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வந்தார். அதன் பிறகு இன்னொரு தொலைக்காட்சியில் “மக்கள் அரங்கம்” என்ற மேடை நிகழ்ச்சியையும் நடத்தி சின்னத்திரை ரசிகர்கள் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார்.
நாடகம், சினிமா, சின்னத்திரை என அனைத்திலும் தனக்கென ஒரு தனி பாணியுடன் முத்திரை பதித்த விசு 25 படங்கள் வரை இயக்கியுள்ளார். தான் இயக்கிய படங்கள் மட்டுமின்றி பிற இயக்குநர்களின் இயக்கத்திலும் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்திலும், துணை கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருக்கின்றார். “மிஸ்டர் பாரத்” “மன்னன்”, “உழைப்பாளி”, “அருணாச்சலம்” என தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்றும் நடித்துள்ளார். தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட விருதுகளை இவரது படங்கள் வென்றுள்ளன.
விசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்
1. மணல்கயிறு
2. கன்மணி பூங்கா
3. டௌரி கல்யாணம்
4. புயல் கடந்த பூமி
5. ராஜதந்திரம்
6. வாய் சொல்லில் வீரனடி
7. நாணயம் இல்லாத நாணயம்
8. அவள் சுமங்கலிதான்
9. புதிய சகாப்தம்
10. கெட்டி மேளம்
11. சிதம்பர ரகசியம்
12. சம்சாரம் அது மின்சாரம்
13. திருமதி ஒரு வெகுமதி
14. காவலன் அவன் கோவலன்
15. பெண்மணி அவள் கண்மணி
16. சகலகலா சம்மந்தி
17. வரவு நல்ல உறவு
18. வேடிக்கை என் வாடிக்கை
19. உரிமை ஊஞ்சலாடுகிறது
20. நீங்க நல்லா இருக்கணும்
21. பட்டுக்கோட்டை பெரியப்பா
22. வா மகளே வா
23. மீண்டும் சாவித்திரி
24. சிகாமணி ரமாமணி