ஐதராபாத்: ஐதராபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ‘பை பை மோடி’ பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடந்த அரசியல் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நாளையும் (ஜூலை 2), நாளை மறுநாளும் ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஐதராபாத்துக்கு வருகிறார். ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், நாளை மறுநாள் மாலை ஐதராபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.அவரது வருகையையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், ‘பை பை மோடி’ என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டன. ‘கோபேக் மோடி’ என்று எதிர்ப்புக்கு பதிலாக ‘பை பை மோடி’ எதிர்ப்பு பேனர்கள் வைத்திருந்தது என புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த எதிர்ப்பு பேனர்களை அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில் நாளை ெதாடங்கும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில், பாஜகவின் ஆட்சி நடைபெறும் குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோக்கப்படுகிறது. நாளை மறுநாள் நடைபெறும் தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொள்வதால் அன்றைய தினம் முக்கிய தீர்மானங்கள், சமீபகாலமாக கட்சிக்கு ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள், ஒன்றிய அரசின் செயல்பாடுகள், 2024 நாடாளுமன்ற தேர்தல், அதற்கு முன்னதாக தெலங்கானா போன்ற மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற ேதர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராயப்பட உள்ளது. நாளை செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மோடிக்கு தெலங்கானாவின் பல்வேறு உணவுகள் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் விஐபிக்களுக்கு 30 வகையான உணவுகளை சமைத்து உபசரிக்க கரீம்நகரைச் சேர்ந்த ஜி.யாதம்மா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரதமருக்கு உணவு தயாரிப்பேன் என்று தன் வாழ்நாளில் நினைத்ததே இல்லை. தெலங்கானா உணவை ருசியாக சமைத்து கொடுப்பேன்’ என்றார்.