சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஏ.ஏ. ஓர்கோபி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச்சந்திப்பில், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் அனைத்து துறைகளிலும் அதன் பாதகமான பாதிப்புக்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார். சவூதி அரேபிய இராச்சியத்துடனான எரிசக்தி ஒத்துழைப்பை மிகவும் அவசரமான விடயமாகக் கருதி, 2022 ஜூலை 02 – 05 வரை அதிமேதகு இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவராக இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வதற்கு வசதிகளை வழங்குமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் மேலும் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை – சவுதி இருதரப்பு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் நல்குவதாக சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஒர்கோபி உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூலை 01