ஒட்டன்சத்திரம்: வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10-க்கும் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி, ஒட்டன்சத்திரம், வடமதுரை, அய்யலூர், தொப்பம்பட்டி, திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் அதிக பரப்பில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100யைக் கடந்து விற்பனையானது. இதனால் விவசாயிகள் பலரும் தக்காளி விவசாயத்திற்கு மாறினர்.
மூன்று மாதத்திற்கு முன்பு நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் இயற்கை இடர்ப்பாடுகள் இன்றியும், கிணறுகளில் தேவையான நீர் இருந்ததாலும் தற்போது காய்த்து குலுங்குகின்றன. இதனால் மார்க்கெட்டிற்கு கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து வருகிறது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.100க்கும் மேல் விற்ற தக்காளி படிப்படியாக விலை குறைந்து கடந்த ஜூன் 5ம் தேதி ரூ.50க்கு விற்பனையானது. இதன்பின் தொடர்ந்து இறங்குமுகத்தைக் கண்ட தக்காளி விலை கடந்தவாரம் ரூ.20க்கு விற்பனையானது. தற்போது தக்காளி விலை மேலும் குறைந்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை வெளிமார்க்கெட்டில் விற்பனையாகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காந்திகாய்கறி மார்க்கெட் கமிஷன் கடை உரிமையாளர் ஆறுமுகம் கூறியது: ”வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒரு பெட்டி(15 கிலோ) தக்காளிவிலை ரூ.110க்கு விற்பனையாகிறது. மொத்தவிலையில் ஒரு கிலோ ரூ.7க்கு விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. மொத்த மார்க்கெட்டில் இருந்து வாங்கிச்செல்லும் வியாபாரிகள் போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவைகளைச் சேர்த்து ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் குறையவாய்ப்புள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளியை ரூ.100-க்கு வாங்கிய பொதுமக்கள் தற்போது 100 ரூபாய்க்கு 10 கிலோவிற்கு மேல் வாங்கும் நிலை உள்ளது” என்றார்.