கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) ரயில்களில் முதல் வகுப்பு ஏ.சி.யில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதேபோல முன்னாள் எம்பிக்கள் 2ம் வகுப்பு ஏ.சி.யில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி.யில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு செலுத்தும். ரயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கிறது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயணம் செய்த வகையில் ஒன்றிய அரசு செலவழித்த தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் கடிதம் அனுப்பினார். இதற்கு மக்களவை செயலகம், ‘கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்பிக்களின் ரயில் பயண செலவு ரூ.62 கோடி’ என பதிலளித்துள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்பிக்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்பிக்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21-ம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.