பெண் ஒருவர் வெறிநாய் கடியால் இறந்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
வடக்கு கேரளாவில் வசித்து வருபவர் 19 வயதான கல்லூரி மாணவி ஸ்ரீலக்ஷ்மி. இவரை பக்கத்து வீட்டு நாய் ஒன்று கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனையை அணுகியவர், மருத்துவர் பரிந்துரைத்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்.
அதன் பிறகு, இவருக்கு எந்த அறிகுறிகளும் தோன்றவில்லை என்பதால், தொடர்ந்து கல்லூரி சென்றுள்ளார். இந்நிலையில் மே 30-ம் தேதி நாய்க்கடியால் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தோன்றவே, தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அதன் பிறகு, திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்படும்போது அதிக காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில், திடீரென மருத்துவமனையிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது.
போதுமான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டும், சரியான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும், பெண் இறந்தது குறித்து விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநில சுகாதார இயக்குநருக்கு சுகாதாரத துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியின் கீழ் குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.