புது டெல்லி: கடந்த மே மாதம் மட்டுமே இந்தியாவில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகளுக்கு தடைவிதித்து உள்ளதாக மல்டி மீடியா மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதனை மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது வாட்ஸ்அப்.
இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ் மாதந்தோறும் பயனர் பாதுகாப்பு குறித்த அறிக்கையை வாட்ஸ்அப் தாக்கல் செய்து வருகிறது. பயனர்கள் கொடுக்கின்ற புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் கொள்கையை மீறும் பயனர்களை அடையாளம் கண்டு ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட பயனர்களின் கணக்கை வாட்ஸ்அப் தடை செய்து வருகிறது.
அந்த வகையில் மே மாதத்திற்கான அறிக்கை இப்போது வெளியாகியுள்ளது. அதில் 19.10 லட்சம் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைவிதிக்கப்பட்டுள்ள 19.10 லட்சம் கணக்குகளில் பெரும்பாலான கணக்குகள் வாட்ஸ்அப்பின் மேம்பட்ட மெஷின் லெர்னிங் சிஸ்டம் மூலம் கொள்கை விதிகளை மீறியது கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அது தவிர 24 கணக்குகளின் மீது பயனர்கள் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளும், மார்ச் மாதம் சுமார் 18 லட்சம் கணக்குகளும், பிப்ரவரியில் 14.26 லட்சம் கணக்குகளும், ஜனவரியில் 18.58 லட்சம் கணக்குகளும் தடை செய்தது வாட்ஸ்அப். +91 என தொடங்கும் வாட்ஸ்அப் கணக்குகளின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.