திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த இடத்தில் பிரபல மருத்துவரின் ஒரு வயது பேரனுக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவை சரி செய்வதற்காக பூட்டப்பட்ட மருந்தகத்தை நள்ளிரவில் திறக்க வைத்து மருந்துவாங்கிக் கொடுத்து உதவிய காவலரின், தன்னலமற்ற சேவையை பாராட்டி கொழும்புவை சேர்ந்த தமிழ் மருத்துவர் தூத்துக்குடி போலீசுக்கு பாராட்டுக்கடிதம் எழுதி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு உலகெங்கிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
அந்தவகையில் இலங்கையின் தலை நகரான கொழும்புவில் பிரசித்தி பெற்ற உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை நிபுணரான ராமசுப்பு என்பவர் , கோவையில் உள்ள தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.
கடந்த 18 மற்றும் 19 ந்தேதிகளில் அங்குள்ள சிவமுருகன் லாட்ஜில் தங்கி இருந்த நிலையில் 18 ந்தேதி நள்ளிரவு மருத்துவர் ராமசுப்புவின் ஒரு வயது பேரனுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
குழந்தை வலியால் அலறித்துடிக்க , தனது பேரனுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு ராமசுப்பு கடை வீதிக்கு சென்றுள்ளார்.
அங்கு 24 மணி நேர மருந்தகம் ஒன்று கூட இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு திகைத்து நின்ற அவர், இரவு ரோந்துப்பணியில் இருந்த காவலர்களிடம் நிலைமையை எடுத்து கூறி உள்ளார்.
அப்போது பணியில் இருந்த காவலர் சிவா தங்கதுரை என்பவர், மருத்துவர் ராமசுப்புவின் நிலை அறிந்து அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்று தேடிப்பார்த்த நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் மருந்து கடைகள் இல்லாத நிலையில் பூட்டப்பட்டுக்கிடந்த ஒரு மருந்தக உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு, வரவைத்து கடையை திறந்து அவரது மருந்தகத்தில் இருந்து மருத்துவர் ராம்சுப்புவுக்கு தேவையான மருந்துகள் கிடைக்க உதவி செய்துள்ளார்.
அவற்றை வாங்கிக் கொண்டு வந்து தனது பேரனுக்கு சிகிச்சை அளித்துள்ளார் மருத்துவர் ராமசுப்பு. அந்த காவலர் தக்க நேரத்தில் சிரமம் பாராமல் மருந்து கிடைக்க உதவியதால் அவரது பேரன் குணமடைந்துள்ளான்.
மறுநாள் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி இருக்கின்றார் மருத்துவர் ராமசுப்பு..!
அந்த காவலரின் இந்த மனித நேய உதவிக்கு பாராட்டு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு அனுப்பி உள்ள பாராட்டு கடித்தத்தில் மருத்துவர் ராமசுப்பு மேற்கண்ட தகவல்களை விவரித்துள்ளார்.
கொள்ளையர்களையும் கொலையாளிகளையும் விரட்டிப்பிடிப்பது மட்டுமல்ல, ஆபத்து காலத்தில் தவிப்பவர்களுக்கு உதவுவதும் போலீசாரின் கடமை என்பதை தனது தன்னலமற்ற பணியால் காவலர் சிவா தங்கதுரை நிரூபித்துள்ளார் என அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனும் அந்த காவலரை பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளார்.
அதே நேரத்தில் திருச்செந்தூர் போன்ற முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகங்கள் செயல்பட மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.